மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனத்தால் சுமார் 19 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ஜியோ வேர்ல்ட் சென்ட்டர் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த கட்டிடமானது ஃபிபா கால்பந்து மைதானத்தை விட 12 மடங்கும், நியூயார்க்கில் உள்ள எம்பையர் ஸ்டேட் கட்டிடத்தை விட 10.3 மடங்கு பெரியதாகும். மகாராஸ்டிராவின் பந்த்ரா குந்த்ரா காம்ப்ளக்ஸில் இந்த கட்டிடமானது அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தை பாதுகாக்கும் பணியில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் ஈடுபட உள்ளனர். சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பு வழங்கும் 3வது ரிலையன்ஸ் கட்டிடம் இதுவாகும். நவி மும்பையில் அமைந்துள்ள ரிலையன்ஸ் ஐடி பார்க் மற்றும் குஜராத் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் சுத்திகரிப்பாலையையும் பாதுகாக்கும் பணியில் மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் ஏற்கனவே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரிலையன்ஸின் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி ஆகிய இருவருக்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
சுமார் 230 சிஐஎஸ்எஃப் வீரர்கள் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிரான பதிலடி கொடுக்கும் வசதியுடன் இந்த கட்டிடத்திற்கு பாதுகாப்பளிப்பார்கள். இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கிவிட்ட நிலையில் இந்த மாதத்தின் இறுதியில் இருந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது. இவர்களுக்காக நவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வாகனங்கள் ஆகியவை வழங்கப்படும்.
இந்த கட்டிடத்திற்கு தீவிரவாத மற்றும் நாசவேலை அச்சுறுத்தல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக மத்திய பாதுகாப்பு ஏஜென்ஸி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இக்கட்டிடத்தின் பாதுகாப்பிற்காக சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பு அளிக்கும் 12வது நிறுவனம் இதுவாகும்.
ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம், இன்ஃபோசிஸின் 3 இடங்கள், மும்பை ஹோட்டல் டெர்மினல், ஜாம்நகர் நயாரா எனர்ஜி லிமிட்டெட், ஒடிசா டாடா ஸ்டீல், எலெக்ட்ரானிக் சிட்டி பெங்களூரு, ஹரியானா பதஞ்சலி நிறுவனம் ஆகிய இடங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.
சிஐஎஸ்ஃப் வீரர்கள் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளித்து வந்த நிலையில், 2008ல் தாஜ் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:ரோம் அரண்மனைக்கு ராஜா வருவதுபோல.. மோடி மோடி என கோஷம்.. மக்களவையில் கர்ஜித்த மஹுவா மொய்த்ரா
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்