வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் பெய்தது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் சேதத்துக்குள்ளாகின. இதனையடுத்து சேதங்களை பார்வையிட மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குழு ஒன்றை அனுப்பி வைத்தது. இதற்கிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தொடர்ந்து பார்வையிட்டார். கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சந்தித்தார். அதில் தமிழ்நாட்டிற்கு ரூ.2,079 கோடியை மழை வெள்ள நிவாரணமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
எனினும் இதுவரை மத்திய அரசு சார்பில் எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை. இந்தச் சூழலில் நேற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மழை வெள்ள நிவாரணத்திற்கு 6 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பின்படி,இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரண பணிகளுக்கு 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண தொகையில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 3,063.21 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில் ட்வுதே புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு 1,133.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் யாஸ் புயல் பாதிப்பிற்கு உள்ளான மேற்கு வங்கத்திற்கு 586.59 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர தென்மேற்கு பருவ மழையில் பாதிப்பு அடைந்த அசாம் மாநிலத்திற்கு 51.53 கோடி ரூபாய், கர்நாடகா மாநிலத்திற்கு 504.06 கோடி ரூபாய் ,மத்திய பிரதேசத்திற்கு 600.50 கோடி ரூபாயும், உத்தராகண்டிற்கு 187.18 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு இந்த அறிவிப்பிலும் எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை. மேலும் தற்போது வரை முதற்கட்டமாகவும் எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை.
முன்னதாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “கொரோனா பெருந்தொற்றால் மாநிலத்தின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிரந்தரமாக சீரமைக்க நிதி தேவைப்படுகிறது. எனவே தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு 6,230 கோடி ரூபாய் வழங்கிட வேண்டும். தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக 1,510.83 கோடி ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 4,719.62 கோடியும் வழங்கிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க: கனமழை முதல் அதிகனமழை.. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.!