அச்சு, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கான விளம்பரங்களில் மத்திய அரசு கடுமையான நெறிமுறைகளை வகுத்துள்ளது.
தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இன்றைய காலக்கட்டத்தில் எங்கு பார்த்தாலும், எதில் பார்த்தாலும் விளம்பரங்கள் தான் அதிகளவில் ஆக்கிரமித்திருக்கின்றன. இது நுகர்வோரின் ஆசையை தூண்டி சம்பந்தப்பட்ட பொருள் உட்பட அனைத்திலும் நம்மை அடிமையாக்கி விடும். இது பல நேரங்களில் தற்கொலை, திருட்டு போன்ற குற்றச்செயல்களுக்கும் வழி வகுத்து விடுகிறது.
உதாரணமாக பிரபல நடிகர்கள் தோன்றியதால் ஆன்லைன் ரம்மி விளையாடி லட்சக்கணக்கான பணத்தை இழந்தவர்கள் அதிகம். தமிழகத்திலும் இதுதொடர்பான மோசடியில் சிக்கி கடந்த 10 மாதங்களில் 30க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துக் கொண்டனர். இதேபோல் புகையிலை, பான் மசாலா, மதுபானம் போன்ற விளம்பரங்கள், பைனான்ஸ், சொந்த தொழில் முதலீடு போன்றவற்றில் பிரபலங்களை நடிக்க வைப்பதன் மூலம் நுகர்வோரை கவர்ந்திழுத்து மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இதனிடையே நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதை அடிப்படையாக கொண்டு தவறான வழிகாட்டும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்ய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.இதன்மூலம் அடிப்படை ஆதாரமில்லாதது, தவறான தகவல்,மிகையான வாக்குறுதி அளிப்பது போன்றவற்றால் நுகர்வோர்கள் ஏமாறாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி முதல்முறை மீறினால் ரூ.10 லட்சமும், தொடர்ந்து தவறு செய்பவர்களுக்கு ரூ.50 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நிறுவனத்திற்கு முதல்முறை ஓராண்டு வரையும், தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் 3 ஆண்டு வரையும் தடை விதிக்க முடியும் என்றும் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அச்சு, தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் போன்ற அனைத்து தளங்களிலும் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு வழிகாட்டுதல்கள் பொருந்தும் என்றும், இந்த வழிகாட்டுதல்கள் ஒரே இரவில் மாற்றத்தை கொண்டு வராது என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை தடுக்க, அது தொடர்பாக புகாரளிக்க அதிகாரம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்