மத்திய அரசின் ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை 42 சதவிகிதத்தில் இருந்து 45 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஒரு கோடி பேர் பயன் அடைய உள்ளனர்.
ஒரு கோடி அரசு ஊழியர்களுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்:
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியானது தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் கணக்கிடப்படுகிறது. மத்திய தொழிலாளர் அமைச்கத்தின் கீழ்தான் தொழிலாளர் பணியகம் செயல்பட்டு வருகிறது.
அகவிலைப்படி உயர்வு குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சிவகோபால் மிஸ்ரா கூறுகையில், "இந்தாண்டு, ஜூன் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீடு ஜூலை மாதம் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. அகவிலைப்படியில் நான்கு சதவீத புள்ளிகளை உயர்த்த கோரிக்கை விடுத்து கோருகிறோம். ஆனால், மூன்று சதவீத புள்ளிகளுக்கு சற்று அதிகமாகவே அகவிலைப்படி உயர்வு கணக்கிட்டுள்ளது.
கணக்கிடப்பட்ட புள்ளிக்கு அப்பால் அகவிலைப்படியை உயர்த்துவதில் அரசாங்கம் தயாராக இல்லை. இதனால், அகவிலைப்படி மூன்று சதவீத புள்ளிகள் அதிகரித்து 45 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளது" என்றார்.
ஒப்புதல் தருமா மத்திய அமைச்சரவை?
தொடர்ந்து பேசிய அவர், "அகவிலைப்படி உயர்வால் ஏற்பட உள்ள செலவை நிதியமைச்சகத்தின் வருவாய் துறை கணக்கில் கொண்டு, அதற்கான ஃபார்முலாவை வகுக்கும். பின்னர், மத்திய அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்" என்றார்.
இந்தாண்டு ஜூலை 1ஆம் தேதி முதல், அகவிலைப்படி உயர்வு கணக்கில் எடுத்து கொள்ளப்படும். தற்போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியைப் பெற்று வருகின்றனர். கடைசியாக, கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி, அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு வழங்கப்பட்டது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரையிலான 12 மாத அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரியை கணக்கில் கொண்டு கடந்த முறை அகவிலைப்படியை மத்திய அரசு 4 சதவிகிதம் உயர்த்தியது. இதன் மூலம், 42 சதவிகிதம் அகவிலைப்படி வழங்கப்பட்டது.
மக்களவை, சட்டசபை தேர்தல்:
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட மாதங்களுக்கான விலைவாசி உயர்வு கணக்கில் கொள்ளப்பட்டு, நுகர்வோர் விலைக் குறியீடு மதிப்பிடப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை, அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்தாண்டின் இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.