PM Modi: நாடாளுமன்ற கட்டிடம், போர் நினைவகம் போன்றவற்றை கட்டியபோது எதிர்க்கட்சிகள் விமர்சித்தன என்று பிரதமர்  மோடி தெரிவித்துள்ளார். 


508 ரயில் நிலையங்கள்:


இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. அதேபோல, ரயில்வே பணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்று 'அம்ரித் பாரத்’ திட்டம்.  இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த 508 ரயில்நிலையங்கள்  புனரமைக்கப்பட்டு புதுப் பொலிவு பெற உள்ளது. இதற்கு பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 6) அடிக்கல் நாட்டினார். 


டெல்லியில் இருந்தபடியே காணொலி மூலம் ரயில் நிலையங்களை  மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.25,000 கோடி செலவில் 508 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளது.  இந்த 508 ரயில் நிலையங்கள் இன்று பணிகள் தொடங்கப்பட்டு, 2025ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணியின்போது, ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், பயணிகள் காத்திருக்கும் அறைகள், கூடுதல் நடைமேடைகள், லிப்ட் வசதி, வாகன நிறுத்த வசதி, கேமரா பொருத்துதல், நுழைவு வாயில் சீரமைப்பு போன்ற பணிகள் நடைபெற உள்ளது.


எதிர்க்கட்சிகள் குறித்து கம்ப்ளெயிண்ட்:


இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, "ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் இந்தியா மீது உள்ளது.  உலக அளவில் இந்தியாவின் கௌரவம் அதிகரித்துள்ளது. இந்தியா மீதான உலகின் அணுகுமுறை மாறிவிட்டது. இன்று 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. ரயில்நிலையங்களின் மேம்பாடு சுற்றுலா, பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கிறது.  ஒவ்வொரு ரயில் நிலையமும் நகரம் மற்றும் இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தின் சின்னமாக இருக்கிறது” என்றார்.






மேலும், ”நாட்டின் ஜனநாயகத்தின் சின்னமாக நாடாளுமன்றம் திகழ்கிறது. எதிர்மறை அரசியலை கடந்த நேர்மறை அரசியலின் பாதையில் பயணித்து வருகிறோம்.  நாடாளுமன்ற கட்டிடம், போர் நினைவகம் போன்றவற்றை கட்டியபோது எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. எதிர்க்கட்சியினர் தாங்களும் எதுவும் செய்ய மாட்டார்கள். செய்பவர்களையும் விட மாட்டார்கள். நாட்டின் துணிச்சலான வீரர்களுக்கு ஒரு போர் நினைவுச்சின்னம் கூட கட்டவில்லை. நாங்கள் தேசிய போர் நினைவகத்தை கட்டியபோது, ​​அதை பகிரங்கமாக விமர்சித்தனர். நாட்டிலேயே மிக உயரமானதாக வல்லபாய் படேல் சிலை இருக்கிறது. ஒவ்வொரு இந்தியனும் இதை நினைத்து பெருமைப்படுகின்றனர். ஆனால்,  எதிர்க்கட்சி தலைவர்கள் யாரும் வல்லபாய் படேல் சிலையை ஒருமுறை கூட பார்வையிட்டதில்லை” என்றார் பிரதமர் மோடி.