வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் பல ஆண்டுகளாக நாகா படையினருக்கும் இந்திய அரசுக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகார சட்டம் (AFSPA) அங்கு அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தின் படி நாகாலாந்து மாநிலம் அமைதி குலைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டு அங்கு ராணுவ படைக்கு சிறப்பு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் நாகாலாந்து பகுதியில் இந்த உத்தரவு 6 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. 


அதன்படி இந்த உத்தரவு ஜூன் 30ஆம் தேதியான இன்றுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில் நேற்று நாகாலாந்து முதலமைச்சர் நெஃபூ ரியோ நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று நாகாலாந்து மாநிலத்தை மேலும் 6 மாதங்களுக்கு அமைதி குலைந்த பகுதியாக நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 




இது தொடர்பாக வெளியான அறிவிப்பின்படி, “ஜூன் 30 2021 முதல் டிசம்பர் 31 2021 வரை நாகாலாந்து மாநிலம் முழுவதும் அமைதி குலைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மாநில காவல்துறையுடன் சேர்ந்து ராணுவத்தினருக்கும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு தொடர்ந்து ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டமும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 


நாகா படையின் என்.எஸ்.சி.என்- ஐஎம் இயக்கத்துடன் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்து இட்டது. எனினும் அந்த ஒப்பந்தம் தொடர்பான தகவலை இதுவரை மத்திய அரசு வெளியிடவில்லை. மேலும் அப்பகுதியில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் தற்போது அது மீண்டும் தொடரப்பட்டுள்ளது. 


ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் 1958 என்றால் என்ன?




1958ஆம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட சட்ட ஒழுங்கு சீர்கேட்டை பாதுகாக்க ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் பிரிவு 3ன் படி ஒரு மாநிலத்தை அல்லது அதன் சில பகுதிகளையோ அமைதி குலைந்த பகுதியாக அறிவிக்க முடியும்.  இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது அம்மாநிலத்தின் ஆளுநர் அறிவிக்க முடியும். இந்த அறிவிப்பு 6 மாதங்களுக்கு பொருந்தும். அதன்பின்னர் அதை மீண்டும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க முடியும். 


அமைதி குலைந்த பகுதி என்று அறிவிக்கப்பட்டால் அந்த இடத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வேலையை ராணுவம் மேற்கொள்ளலாம். மேலும் அவர்களுக்கு சில சிறப்பு அதிகாரங்களும் உண்டு. அதாவது அவர்கள் அங்கு 5 பேருக்கு மேல் கூட்டம்  சேர்ந்தால் கைது செய்ய முடியும். அத்துடன் ஒரு முறை எச்சரித்து பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முடியும். மேலும் சோதனை ஆணை இல்லாமலே இடங்களை சோதனை செய்ய முடியும்.  இப்படி பட்ட பல சிறப்பு அதிகாரங்கள் ஆயுதப் படைக்கு இந்தச் சட்டம் அளித்து வருகிறது. இச்சட்டம் நாகாலாந்து மாநிலம் 1963ஆம் ஆண்டு முதல் நாகாலாந்தில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: இந்த 5 இடங்களில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை தெரியுமா !