மூன்றாம் பாலினத்தவர், தன்பாலின உறவாளர்கள், பாலியல் தொழிலாளர்கள் ரத்த தானம் செய்யத் தடை விதித்துள்ளது குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்டவர்கள் ரத்த தானம் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க ரத்த தானம் செய்யத் தகுதியானோர் விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்ய வலியுறுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. 


ரத்ததானம்:


மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்த தானத்தின்போது 350 மில்லியை மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 பேரைக் காப்பாற்ற முடியும்.  கொடையாளி அளிக்கும் ரத்தத்தை சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என்று மூன்றாகப் பிரிக்கிறோம். இவற்றைத் தனித்தனியாகப் பெறும் நோயாளிகள் மூவர், காப்பாற்றப்படுகின்றனர். இந்நிலையில் ரத்த தானம் பெறுவதில் பாரபட்சம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு கவனம் பெற்றுள்ளது.


அதில் கூறியிருப்பதாவது: 


சமரசம் கூடாது:


உச்சநீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள மனுவின் மீது மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், மூன்றாம் பாலினத்தவர், பெண் பாலியல் தொழிலாளர்கள், ஆண் ஆண் உறவாளர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது என்பதற்கு உறுதிப்படுத்தப்பட்ட அறிவியல் ஆதாரங்கள் உள்ளன. நம் நாட்டின் ரத்த தான திட்டம் என்பது சில வரையறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அது ரத்த தானம் பெறுபவரின் முழு நம்பிக்கையையும் பெற்றதாக இருக்க வேண்டும்.


ரத்தம் கொடையாக வழங்குபவருக்கும் அது சரியான விதத்தில் பயன்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக இருக்க வேண்டும். ரத்த தானம் உயிர் காக்கும் சிகிச்சை. இதில் நாம் எவ்வித சமரசங்களும் செய்ய முடியாது. தன்பாலின உறவாளர்கள் குறிப்பாக ஆண் தன்பாலின ஈர்ப்பாளர்கள் ரத்தத்தில் ஹெபாடிடிஸ் சி கிருமி இருக்க வாய்ப்பு அதிகம். அதேபோல் பாலியல் தொழிலாளர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஹெச்ஐவி தொற்றுக்கு ஆளாகவும் வாய்ப்பு அதிகம். அவர்களை ரத்த தானம் செய்ய அனுமதித்தால் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.


பிப்ரவரி மாதம் இந்த பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த தங்கம் சாந்தா சிங் என்ற நபர் மனு தாக்கல் செய்திருந்தார். இவர் மணிப்பூரைச் சேர்ந்தவர் ஆவார். இந்த மனு மீண்டும் இம்மாத கடைசியில் விசாரணைக்கு வரவுள்ளது.


ரத்த தானம் செய்யத் தகுதிகள் என்னென்ன?


ரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.
ரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் ரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.
கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.
எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.
கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.
ரத்தப் பிரிவு, ரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா? என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.


நம் நாட்டைப் பொறுத்த வரை மேற்கூறிய அம்சங்கள் ரத்த தானம் செய்ய மிகவும் அவசியமானதாக உள்ளது.