ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


ஆன்லைன் விளையாட்டுகள்:


அதன்படி சமூக ஊடக தளங்களுக்கு 2021 இல் வெளியிடப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் உள்ளடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் ஆன்லைன் கேமிங் துறையின் வளர்ச்சியை பொறுப்பான முறையில் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் அனைத்தும் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • ஆன்லைன் கேமிங் தளங்கள் இந்திய நாட்டின் சட்டங்களுக்கு இணங்க வேண்டும். 

  • ஆன்லைன் விளையாட்டில் எழும் புகார்களை, குறைதீர்க்கும் முறையின் கீழ் தீர்க்க வேண்டும்.

  • ஆன்லைன் விளையாட்டில் பங்கேற்போர் இந்திய சட்டங்களை மீறி ஆன்லைன் கேமை ஹோஸ்ட் செய்யவோ, காட்சிப்படுத்தவோ, பதிவேற்றவோ, அனுப்பவோ அல்லது பகிரவோ கூடாது. 

  • ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடும் நபர்களுக்கு கட்டாய சரிபார்ப்பு மற்றும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கான இந்திய முகவரி ஆகியவை அவசியம்.

  • சுயஒழுங்குமுறை அமைப்பிடம் பதிவு செய்து,  அரசின் நிபந்தனைகளுக்குட்பட்டு பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் ஆன்லைன் கேமை பதிவு செய்யலாம். 

  • அனைத்து ஆன்லைன் கேம்களிலும்  டெபாசிட் தொகையை திரும்ப பெறுதல், வெற்றிகளை நிர்ணயிக்கும் விதம் கட்டணம் மற்றும் அதன் கொள்கைகள் குறித்து பயனர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 


இதுகுறித்த கருத்துகளை பொதுமக்கள் ஜனவரி 17ம் தேதிக்குள் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 


எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் 


நாளுக்கு நாள் ஆன்லைன் விளையாட்டுகள் ஒருபக்கம் அதிகரித்து வந்தாலும், மறுபக்கம் பண இழப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் தொடர் தற்கொலைகளும் நிகழ்ந்து வருகின்றது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.