மணிப்பூர் விவகாரத்தில் சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளை சேர்ந்த, எந்த ஒரு முக்கிய பிரபலமும் இதுவரை வெளிப்படையாக பேசாதது சமூக வலைதலங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. 


”தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டிற்கும் மேலாக விவாசயிகள் போராடிக்கொண்டிருந்தபோது, உள்நாட்டை காட்டிலும் வெளிநாடுகளில் இருந்து விவசாயிகளுக்கான ஆதரவு பெருகியது. அப்போது பொங்கி எழுந்த சச்சின் உள்ளிட்ட பல பிரபலங்கள், எங்கள் நாட்டு விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம் என ஆவேசமாக பேசியிருந்தனர். ”


கொண்டாப்படும் பிரபலங்கள்:


இந்தியாவில் சினிமா, விளையாட்டு (குறிப்பாக கிரிக்கெட் ) உள்ளிட்ட துறைகளில் வெற்றி பெற்றவர்களை பின்பற்றும் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அவர்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துமே சமூகத்தில் பெரும் தாக்கத்தயே ஏற்படுத்தக் கூடியது. அதற்கு உதாரணம் அண்மையில் வெளியான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் புகைப்படம் ஒன்றில், அவர் கேண்டி கிரஷ் கேம்விளையாடுவது போன்று இருந்தது. அந்த புகைப்படம் வெளியான அடுத்த சில மணி நேரங்களில், அந்த கேம் செயலி லட்சக்கணக்கான புதிய பதிவிறக்கங்களை பெற்றது. சமூகத்தில் இந்த பிரபலங்களாகல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான ஒரு சிறிய உதாரணம் தான் மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்வு.


விவசாயிகள் போராட்டம்:


இப்படிபட்ட சமூக சூழலில் தான் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என, கடந்த 2020ம் ஆண்டு தொடங்கி தலைநகர் டெல்லியில் கடும் பனிப்பொழிவிற்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஓராண்டிற்கு மேலாக போராடினர். இதில் பலர் உடல்நலக்குறைவால் உயிரிழக்கவும் செய்தனர். உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த இந்த போராட்டத்தால், பல்வேறு நாடுகளில் இருந்தும் விவசாயிகளுக்கான ஆதரவு குவிந்தது. ஆனால், அதுவரை விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வாய் திறக்காத பல விளையாட்டு மற்றும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் யாரும் அநாவசியமாக பேச வேண்டாம். எங்கள் பிரச்னையை நாங்களே தீர்த்துக்கொள்வோம் என பேசியது பெரும் கவனம் ஈர்த்தது.


சாலையில் போராடிய மல்யுத்த வீரர்கள்:


இந்த நிலையில் தான், சர்வதேச போட்டிகளில் விளையாடி பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த இந்தியாவையே பெருமைப்படுத்திய, மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு மல்யுத்த சம்மேளன தலைவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக அண்மையில் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றால், சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை நதியில் வீசுவோம் எனவும் அறிவித்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டு கோடிகளை சம்பாதிக்கும் எந்த ஒரு கிரிக்கெட் வீரரோ, ரசிகர் பட்டாளத்தை வைத்துக்கொண்டு நூறு கோடிகளுக்கும் மேலாக ஊதியம் வாங்கிக் கொண்டிருக்கும் எந்தவொரு திரைநட்சத்திரமோ பகிரங்கமாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. சக விளையாட்டு வீரர்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர் என்ற எண்ணத்தில், தார்மீக ரீதியிலான ஒரு ஆதரவை கூட நாடே கொண்டாடும் இந்த பிரபலங்களால் மனம் திறந்து தெரிவிக்க முடியவில்லை.


நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்கள்:


அதைதொடர்ந்து மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் உச்சகட்டமாக இரு பெண்கள் ஆடைகள் களையப்பட்டு கட்டாயப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு. அவர்களை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட கொடூர சம்பவமும் அரங்கேறியுள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக கடந்த மாதமே ஐரோப்பா நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு, எங்கள் நாட்டு பிரச்னையை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என வெளியுறவு அமைச்சகம் பதிலடி தந்தது. அப்படி ஏதேனும் உடனடி நடவடிக்கை எடுத்து இருந்தால், அண்மையில் அரங்கேறிய மணிப்பூர் கொடூரம் தவிர்க்கப்பட்டு இருக்கும்.  அதேநேரம், எங்களின் உள்நாட்டு விவகாரங்களை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என கூறிய, ஒரு சிலரை தவிர எந்தவொரு முக்கிய இந்திய பிரபலங்களும் இதுவரை வாய் திறக்கவில்லை.


நட்சத்திரங்களிடம் எதிர்பார்ப்பது என்ன?


அனைத்து விவகாரங்களிலும் சினிமா மற்றும் விளையாட்டு துறைகளை சேர்ந்த நட்சத்திரங்கள் கருத்து சொல்வதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்து விடும் என இங்கு கூறவில்லை. அந்த பிரபலங்கள் பேசுவதன் மூலம், மக்களிடையே அதுதொடர்பான விழிப்புணர்வு மற்றும் விவாதம் அதிகரிக்கும். இதன் மூலம் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பதற்காகவாவது,  அரசு இயந்திரம் விரைந்து செயல்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதே ஒரே நோக்கம்.


ரசிகர்கள் மீது கூடவா அக்கறை இல்லை?


ஆனால், விளையாட்டு மற்றும் சினிமா போன்றவற்றால் பிரபலமான நட்சத்திரங்கள், இன்று சமூக வலைதளங்களில் ஒரு பதிவினை போடக் கூட லட்சங்கள் தொடங்கி கோடிகள் வரை ஊதியமாக பெறுகின்றனர். இப்படி தங்களது அனைத்து நடவடிக்கைகள் மூலமும் பணம் சம்பாதிக்கும் நட்சத்திரங்கள், அவர்களது வருவாய்க்கான மூலதனமாக உள்ள, மக்களுக்காகவும் அவர்களது பிரச்னைக்காகவும் ஏன் ஒரு பதிவை கூடவா வெளியிட முடியாது?. நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளில் பாதிக்கப்படுபவர்களும், அந்த பிரச்னைகளை நிகழ்த்துபவர்களும் இந்த பிரபலங்களில் யாரேனும் ஒருவரது ரசிகராக தான் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி இருக்கையில் தனது ரசிகர்களின் நலனுக்காகவாவது ஒரு பதிவினை வெளியிட அவர்களுக்கு தோன்றவில்லையா? பிறந்த நாள், திருமண நாளுக்கெல்லாம் பிரதமர் மோடியை நேரிலேயே சென்று சந்தித்து வாழ்த்து பெறும் உங்களால், மக்கள் பிரச்னைக்காக ஒருமுறை கூடவா அவர்களை சந்திக்க முடியவில்லை. 


என்னங்க சார் உங்க பிரச்னை?



  • வீராங்கனைகள் வெற்றி பெற்றால் நாட்டையே பெருமைப்படுத்திவிட்டீர்கள் என சமூக வலைதளங்களில் பதிவிடும் உங்களால், அவர்கள் சாலையில் இறங்கி போராடும்போது ஆதரவு தெரிவிக்க முடியவில்லையா? 

  • மகளிர் தினம், அன்னையர் தினம் வந்துவிட்டால் பெண்கள் போற்றாப்பட வேண்டும் என பக்கம் பக்கமாக பேசும் உங்களால், பெரும் கூட்டமே பட்டப்பகலில் இரு பெண்களை நிர்வானப்படுத்தியது தொடர்பாக வாய் திறக்க முடியவில்லையா?

  • நிலவை ஆராய சந்திரயானை செலுத்தியபோது நாடே பெருமை கொள்கிறது என தேசிய கொடிகளை பறக்கவிட்ட தங்களால், நாடே வெட்கி தலைகுனியும் விதமான மணிப்பூர் சம்பவத்திற்கு கருத்து சொல்ல முடியவில்லையா? 


அரசாங்கத்தின் மீதான பயமா?


மல்யுத்த வீராங்கனைகள் சாலையில் இறங்கி போராடியபோது, பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்த எந்தவொரு கிரிக்கெட் வீரருமே வாய் திறக்கவில்லை. (கிரிக்கெட் வீரர்களை மட்டுமே குறிப்பிடுவதன் நோக்கம், மற்ற எந்த விளையாட்டை காட்டிலும் கிரிக்கெட் வீரர்களே இந்தியாவில் அதிகம் கொண்டாடப்படுகின்றனர், தலைவனாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர் என்பதற்காக மட்டுமே). ஏன் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து கூறினால், தங்களின் விளையாட்டு எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமே என்பதனாலா?..  மறுபுறம்,  அரசுக்கு எதிராக பேசினால் தங்களது படங்களுக்கான வரிச்சலுகை வாய்ப்புகள் குறைவதோடு, திரை வாழ்க்கையே முடங்கிவிடுமோ என என்ற பயத்தினாலா?


ப்ளீஸ் இதை செய்யாதிங்க?


அய்யா நட்சத்திரங்களே, உங்களை ரோல் மாடலாக கொண்டு கொண்டாடி வருபவர்களின் பெரும்பாலானோர் அடித்தட்டு மக்கள் தான். அவர்களுக்கான அடிப்படை பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியாத நீங்கள், எப்படி அரசின் ஆடம்பர திட்டங்களால் மட்டும் நாடே பெருமை கொள்கிறது என பெருமிதம் கொள்கிறீரகள். நாட்டில் நிலவும் பிரச்னைகளுக்காக எப்படியும் நீங்கள் எதையும் செய்யப்போவதுமில்லை,  வாய் திறந்து கருத்தும் சொல்லப்போவதில்லை. எனவே சொல்பவர்களையாவது குறைகூறாமல் இருங்கள். அப்படி இல்லை,  உள்நாட்டு பிரச்னை தொடர்பாக பேச வேண்டியது நமது கடமை என உணர்ந்தால், இனியாவது மவுனத்தை கலையுங்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவுங்கள்.