தமிழ்நாட்டின் குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த வியாழக்கிழமை பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் உடல்கள் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிற வீரர்களின் உடல்களுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் அஞ்சலி செலுத்திய பின்பு அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டது.




முப்படைகளின் தலைமை தளபதியான பிபின்ராவத்தின் பாதுகாவலரான பாரா கமாண்டோ லான்ஸ் நாயக் விவேக்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான ஹிமாச்சல பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு, அவரது உடலை ஹிமாச்சல பிரதேச முதல்வ்ர ஜெய்ராம் தாக்கூர் பெற்றுக்கொண்டார்.  ஹிமாச்சலில் உள்ள காஹல் விமான நிலையத்தில் விவேக்குமார் உடலுக்கு, அந்த மாநில முதல் ஜெய்ராம்தாக்கூர் அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது.


அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும்போது தேஹாடுவிலும், லம்பாகூனிலும் வழிநெடுகிலும் மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். விவேக்குமாரின் மனைவி பிரியங்கா கூறும்போது, எனது கணவரை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். எங்களது ஆறு மாத குழந்தையை பற்றி அவருக்கு பல கனவுகள் இருந்தது. அவரது அனைத்து கனவுகளையும் நான் நிறைவேற்றுவேன்.” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ஹிமாச்சல் முதல்வர் உயிரிழந்த விவேக்குமாரின் தந்தை ரமேஷ்சந்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.




1993ம் ஆண்டு பிறந்த விவேக்குமார் கடந்த 2012ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்தார். அவரது விடாமுயற்சி மூலமாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்தின் பாதுகாவலர் பொறுப்பு வரை உயர்ந்தார். உயிரிழந்த விவேக்குமாரின் தாயார் அரசாங்கம் ஏதாவது வேலைவாய்ப்பு வழங்கி உதவி புரிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.


முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஏற்கனவே உயிரிழந்த விவேக்குமாரின் குடும்பத்திற்கு உடனடியாக ரூபாய் 5 லட்சம் நிதியை இழப்பீடாக அறிவித்தார். பின்னர், ரூபாய் 5 லட்சத்தை கூடுதல் இழப்பீடாக அறிவித்தார். எம்.எல்.ஏ. ஜெய்சிங்பூர் ரவீந்தீர் திமன், லெப்டினன்ட் ஜெனரல் பி.என். அனந்தநாராயணன், பிரிகேடியர் எம்.கே.சர்மா, கேப்டன் மங்கேஷ் போஸ்லே, துணை ஆணையர் நிபுன் ஜிண்டால் நேரில் மலர்வளையம் வைத்து விவேக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


மேலும் படிக்க..




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண