மணிப்பூரில் குக்கி சோ பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் அழைத்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி நாட்டை உலுக்கி வருகிறது. ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட பழங்குடியின பெண்கள், பின்னர், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்திருந்தாலும், அதுதொடர்பான வீடியோ ஜூலை 19ஆம் தேதிதான் வெளியானது. மக்கள் மத்தியில் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்துதான், காவல்துறை இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய சம்பவம்:


பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் இந்தியா மட்டும் இன்றி, உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, வழக்கு விசாரணை, சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.


இந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர். மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ ஏற்கனவே, 6 வழக்குகளை பதிவு செய்துள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக, 10 பேரை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு சிபிஐ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.


இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் நேற்று அளித்த விளக்கத்தில், "மணிப்பூரில் நடந்த வன்முறை தொடர்பாக சிபிஐ இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. அத்தகைய நடவடிக்கை ஏஜென்சியால் இன்னும் எடுக்கப்படவில்லை. விசாரணை இன்னும் தொடர்கிறது. மேலும், இதுவரை மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்ட எவரையும் நாங்கள் எங்கள் காவலில் எடுக்கவில்லை" என்றார்.


முடங்கி போன நாடாளுமன்றம்:


ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் மணிப்பூர் பக்கம் திரும்பியுள்ள நிலையில், நாடாளுமன்றத்திலும் மணிப்பூர் விவகாரம் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், மணிப்பூர் விவகாரத்தால் முடங்கி போயுள்ளது. மணிப்பூர் குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.


அதேபோல, மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.


ஆனால், மணிப்பூர் குறித்து குறுகிய கால விவாதத்திற்கே மத்திய அரசு சம்மதித்துள்ளது. இதன் காரணமாக, நாடாளுமன்றம் முற்றிலுமாக முடங்கி போயுள்ளது. இதற்கிடையே, பிரதமர் மோடி அரசுக்கு எதிராக இந்தியா (எதிர்க்கட்சிகள் கூட்டணி) கூட்டணி சார்பில் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.


நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டாலும் அதன் மீதான விவாதம் எப்போது நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை உடனடியாக விவாதத்திற்கு ஏற்று கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.