Manipur Violence: மணிப்பூர் உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரன், கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உயர்நிதிமன்ற தலைமை நீதிபதி பணியிடமாற்றம்:
தொடர்ந்து கலவரம் நடைபெற்று வரும் மணிப்பூர் மாநில உயர்நீதிமன்றத்தின், தற்காலிக தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரனை பணியிடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்ன உயர்நீதிமன்றத்திற்கே தன்னை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற முரளிதரனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க, கடந்த ஏப்ரல் மாதம் எம்.வி. முரளிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து தான் மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே கலவரம் வெடித்தது. இதனால், தற்காலிக தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரனுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
3 மாதங்களுக்குப் பின் நடவடிக்கை:
மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுல், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய 3 மாதங்களுக்கு முன்பே கொலிஜியம் பரிந்துரை செய்தது. ஆனால், அதனை செயல்படுத்துவதில் தாமதமாக அதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக கவலை தெரிவித்தனர். பரிந்துரைகள் ஏற்கப்பட்டு கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தான் எம்.வி. முரளிதரன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள்ளார்.
நிராகரிக்கப்பட்ட கோரிக்கை:
கடந்த 9ம் தேதி வெளியான கொல்கத்தா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யும் பரிந்துரையை எதிர்த்து, முரளிதரன் கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில், தன்னை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கே மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில், அவர் விடுத்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்துள்ளது. எனவே, நீதிபதி எம்.வி. முரளிதரனை கொல்கத்தாவில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான முந்தைய பரிந்துரையை மீண்டும் வலியுறுத்த கொலீஜியம் தீர்மானித்துள்ளது
தமிழகத்தைச் சேர்ந்த முரளிதரன்:
வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் உள்ள மணியம்பட்டு கிராமத்தில் பிறந்தவர் முரளிதரன். 54 வயதான அவர் கடந்த 25 ஆண்டுகளாக நீதித்துறையில் உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம், உயர்நிதிமன்ற மதுரைக்கிளை உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் அவர் வழக்காடியுள்ளார். இந்நிலையில் தான் மணிப்பூரில் தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்தபோது, மெய்தி இன சமூக மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கலாம் என தீர்ப்பளித்தார். இதையடுத்து மெய்தி மற்றும் குக்கி சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான பொருட்களும் சேதமடைந்தன. இந்த கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என கண்டித்தது.