டெல்லியில் வேலைக்கு செல்ல விரும்பிய பெண்ணை அவரது மாமனார் நடுரோட்டில் செங்கலால் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பந்தமான வீடியோ அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானதை அடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ”டெல்லி ஃபரிதாபாத்தைச் சேர்ந்தவர் காஜல். இவரது கணவர் பிரவின் குமார். வீட்டின் வறுமை காரணமாக காஜல் வேலைக்கு செல்ல முடிவு செய்தார். கணவர் வேலைக்கு சென்றிருந்ததால், காஜலை வேளைக்கு அனுப்ப அவரது மாமனார் மறுப்பு தெரிவித்தார். இருந்தாலும் மாமனார் சொல்வதற்கு எதிராக காஜல் வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.
இந்நிலையில், நேற்று வேலைக்கு செல்லும் இடத்தில் நேர்கானலுக்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். இதனை அறிந்த அவரது மாமனார் சாலையில் சென்று கொண்டிருந்த காஜலை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வேலைக்கு செல்ல கூடாது என்று கூறி அவர் கையில் வைத்திருந்த செங்கல்லால் அவரது தலையில் அடித்துள்ளார். இதனால் காஜலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் காஜலின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவரது மாமனார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர். வேலைக்கு செல்ல விரும்பிய மருமகளை அவரது மாமனார் செங்கல்லால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க