தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் கொடுத்தது தவறு என பாஜக தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


காவிரி பிரச்னை:


காவிரி நதியிலிருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு உரிய அளவு நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் உத்தரவிட்டும் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை கர்நாடக அரசு இதுவரை திறந்து வைக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அம்மாநிலத்தில் இருந்த பாஜக அரசு பின்பற்றிய அதே கொள்கையை தான், தற்போதுள்ள காங்கிரஸ் அரசும் பின்பற்றி வருகிறது.


தமிழக அரசியல்:


காவிரி பிரச்னை தமிழக அரசியலில் முடியாத ஒரு பிரச்னையாக உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தையும் நாடியுள்ளது. இதனிடையே, 10 டிஎம்சி தண்ணீரை அண்மையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிட்டது. இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கர்நாடக காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியே தண்ணீர் திறந்து விடப்பட்டதாக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கியது முற்றிலும் தவறு என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.


பாஜக குற்றச்சாட்டு:


காவிரி விவகாரம் தொடர்பாக பேசியுள்ள மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 2 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். 16 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 85 தாலுகாக்கள் பெரும் மழைப்பற்றாக்குறையில் தத்தளிக்கின்றன. 


மாநிலத்தில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதோடு, கடுமையான மின்சார பற்றாக்குறை உட்பட பல சவால்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். கர்நாடக விவசாய சகோதரர்களுக்கு இந்த சவாலான சூழல்கள் நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், நீதிமன்றத்திலோ அல்லது அனைத்துக் கட்சிக் கூட்டத்திலோ எந்தவித முன் ஆலோசனையும் இன்றி காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் விடுவதாக அறிவித்துள்ளார். விவசாயிகளின் மிகுந்த துயரத்தில் இருக்கும்போது, ​​அவர் ஏன் அதை செய்தார்.






I.N.D.I.A கூட்டணியின்  முக்கிய கட்சியாக உள்ள திமுகவின் அழுத்தத்தால் சிவக்குமார் இதைச் செய்துள்ளார். காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையே தனித்துவமான உறவு இருந்தது. கடந்த கால வரலாற்றை ஆய்வு செய்தால், காங்கிரசுக்கு திமுக அழுத்தம் கொடுத்ததையும் அதை ஏற்று காங்கிரஸ் செயல்பட்டது போன்ற சிறப்பான சாதனையை நம்மால் காண முடியும்” என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுத்தது தவறு என பொருள்படும் வகையில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேசியது, பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.


அண்ணாமலை சொன்னது?


தமிழகத்திற்கான உரிய நீரை வழங்காத காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாகவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். இப்போது, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கியதை தவறு என தேசிய பாஜகவே கூறியுள்ளது. இதுதொடர்பாக அண்ணாமலை தற்போது வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.