காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மூன்று நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


காவிரி நதிநீரை பங்கிடுவது தொடர்பாக தமிழகத்திற்கும், கர்நாடகாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நிலவி வருகிறது. நீண்ட நாள் போராட்டம் மற்றும் கோரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான 53.77 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்துக்கு 15.79 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. எஞ்சிய 37.97 டிஎம்சி நீர் தமிழகத்தை வந்து சேரவில்லை. 


இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைவாக மழை பெய்ததால், கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பவில்லை என்றும், அதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தேவையான காவிரி நீர் திறக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 11ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. அதில், நிலுவையில் உள்ள 37.9 டிஎம்சி நீரை திறந்துவிடக் கோரி தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை கர்நாடகா ஏற்க மறுத்ததால் தமிழ்நாடு நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 


இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டார். ஆனால், கர்நாடகாவில் கடும் வறட்சியை சந்தித்து வருவதாகவும், தண்ணீர் திறப்பு குறித்து மத்திய அரசு அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தார். 


இந்த சூழலில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி விவகாரத்தில் விசாரணை நடத்த புதிய அமர்வு அமைக்கப்படும் என அதிரடியாக அறிவித்தது. புதிய அமர்வில் மூன்று நீதிபதிகள் இடம்பெறுவார்கள் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்திருந்தார்.


இந்த நிலையில்,  காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கவாய், நரசிம்மா, பி.கே. மிஸ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. காவிரி தொடர்பான வழக்கு வரும் 25ம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.