தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே காவிரி நதிநீர் விவகாரம் மீண்டும் பிரச்னையாக மாறியுள்ளது. சம்பா சாகுபடிக்காக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை. அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. 


அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென நிறுத்தியது. இதனால், காவிரி நீர் விவகாரத்தில் இருமாநிலங்களுக்கும் இடையேயான பிரச்னை பூதாகரமாக வெடித்தது.


பிரச்னையை கிளப்பும் காவிரி விவகாரம்:


இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு கூட்டம் ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்றன. ஏற்கனவே அறிவித்தபடி, தமிழ்நாட்டிற்கு 5000 கன அடி நீர் திறக்கப்பட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுவும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் டெல்லி சென்று, மத்திய ஜல்சக்தி (நீர்வளத்துறை) அமைச்சரை தனித்தனியே சந்தித்தனர். 


இதனிடையே, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது என கர்நாடக அரசும், 24,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இருமாநில அரசுகளின் மனுக்களும் நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர்  மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை மற்றும் உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு, கர்நாடக அரசுக்கு ஆதரவாக உத்தரவுகளை பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.


உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்: 


அதாவது தமிழ்நாடு அரசு சார்பில் 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிடக்கோரியது நிராகரிக்கப்பட்டது.  மேலும், ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு அமல்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் 5000 கன அடி நீரை கர்நாடகம்  தமிழ்நாட்டுக்கு தற்போது திறக்க வேண்டும் என உறுதிப்படுத்தப்பட்டது.


இதை தொடர்ந்து, வரும் 26ஆம் தேதி வரை காவிரி நதிநீரை திறந்து விட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை பின்பற்ற கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும், கர்நாடக அரசின் முடிவும் தமிழ்நாடு விவசாயிகளுக்கு சற்று நிம்மதி பெருமூச்சு தந்துள்ளது.


ஆனால், இது கர்நாடக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் இன்று பந்த்-க்கு அழைப்பு விடுத்தனர். மாண்டியா மட்டும் இன்றி சாம்ராஜ்நகரா, ராமநகரா, பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய குழுக்களும் கன்னட அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.