அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மத்தியில் ஆளும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்தான். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்தியாவிற்காக பேச பாட்காஸ்ட் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை தனது இரண்டாவது  பாட்காஸ்ட் சிரீஸ் வெளியிட்டுள்ளார்.






அதில், “ 2014 ஆம் ஆண்டு ஏமாந்து போனது போல் 2024 ஆம் ஆண்டும் அதே நிலை வந்துவிடக்கூடாது. 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன் குஜராத் மாநிலம் முன்னேற்றம் அடைந்ததாக கூறி அங்கே தேனாறும் பாலாறும் ஓடுவதாக பொய் செய்திகளை பரப்பி தன்னை வளர்ச்சி நாயகனாக காட்டிக்கொண்டார் பிரதமர் மோடி. 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது எனக்கு 60 மாதங்கள் கொடுத்தால் இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன் என்றார். 60 மாதங்கள் முடிந்து மக்கள் சார்பில் கூடுதலாக 60 மாதங்கள் கொடுக்கப்பட்டது. இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றிவிட்டார என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். எந்த துறைகளில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என அவர் பட்டியலிட வேண்டும். ஆட்சிக்கு வரும்போது எனக்கு 5டி (talent, trading, tradition, tourism, technology ) தான் முக்கியம் என குறிப்பிட்டார். ஆனால் இதில் ஏதேனும் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா? பாஜக என்பது 5சி தான் (5c) – வகுப்புவாதம், ஊழல் முறைகேடுகள், மூலதன குவியல், மோசடி, அவதூறுகள் ஆகும். இதனை பாஜக அரசு விளம்பரங்களால் மறைத்து வந்தது. ஆனால் இன்று உருவான இந்தியக் கூட்டணி தலைவர்களின் பரப்புரையால் பாஜகவின் முகத்திரை, மோடி என்ற பிம்பத்தை கிழித்துவிட்டது. இதனை அரசியல் ரீதியாக கூறவில்லை, உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் தான் கூறுகிறோம் என்ற சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.


இந்தியக் கூட்டணியை பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என குறிப்பிட்ட மோடி சி.ஏ.ஜி அறிக்கை பாஜக ஆட்சி பற்றி என்ன கூறியுள்ளது என்பது தெரியுமா? இதை பற்றி நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கவில்லை. அயோத்தி திட்டத்தில் கூட ஊழல் செய்தது பாஜக என சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது. வாயில் நுழையாத பெயரை திட்டத்திற்கு வைப்பதன் மூலம் அதில் என்ன நடக்கிறது என்பது குறித்து யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம் தான். UDAAN திட்டத்தின் மூலம் 7% தடங்களில் மட்டுமே விமான சேவை நடைமுறையில் உள்ளது 93% தடங்களில் இன்னும் விமான சேவை இல்லை. மொத்தமாக அறிவிக்கப்பட்ட 774 வழித்தடங்களில் 720 வழிதடங்களில் விமானம் இயக்கப்படவில்லை என சிஏஜி அறிக்கை கூறியுள்ளது. 2021 - 22 ஆம் ஆண்டில் 100 ரூபாய் வருவாய் ஈட்ட 107 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதால் இந்திய ரயில்வேயின் நிதிநிலை கவலைக்கிடமாக உள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஓய்வுதியத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு விளம்பரங்களுக்கு ஒதுக்கியுள்ள முறைகேடு அம்பலமாகியுள்ளது. முறைகேடுகளுக்கெள்ளாம் உச்சம் சுங்கச் சாவடி முறைகேடு தான். தினசரி முறையில் மக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. 5 சுங்கச் சாவடிகளை தணிக்கை செய்ததில் ரூ. 132 கோடியே 5 லட்சம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் எத்தனை லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டிருக்கும்?


நாட்டில் இருக்கும் சாலைகளை இணைக்கும் திட்டமாக பாரத்மாலா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 15.37 கோடிக்கு பதிலாக ரூ. 32.17 கோடியாக மாற்றி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 8 ஆண்டு காலத்தில் வெறும் 13 ஆயிரம் கிமீ மட்டுமே பணிகள் நிறைவடைந்துள்ளது.


ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு 5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுவதாக பாஜக குறிப்பிடுகிறது. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் திட்டம் வரை 7 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆனால் இதுவரை பிரதமர் மோடி அல்லது சம்மதப்பட்ட அமைச்சர்கள் இதற்கு பதிலளிக்கவில்லை. ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஆட்சி தான் பாஜக என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.