மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்த மாநில பாடத்திட்ட மாணவர்களில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளது.


நீட் தேர்வுக்கு எதிர்ப்பு:


மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாட்டில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் கூட நீட் விவகாரத்தில் ஜெகதீஸ்வரன் எனும் மாணவன் மற்றும் அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டனர். அதோடு, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழ்நாடு அரசின் மசோதாவில் கையெழுத்தே போடமாட்டேன் என ஆளுநரும் கூறியிருந்தார். ஆளுநரின் பேச்சை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் நேற்று கூட திமுக சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் வெளியாகியுள்ள நீட் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


நீட் தேர்வு:


அதன்படி, இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 499 நகரங்களில் 4 ஆயிரத்து 97 மையங்களில் நடந்தது. தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தியது. அந்த தேர்வை எழுதிய மாணவர்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து நடப்பாண்டு வரை நீட் தேர்வை எழுதிய மாணவர்களில் அதிகம் பேர் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தான். நடப்பாண்டில் மட்டும் 5 லட்சத்து 51 ஆயிரத்துக்கு மேற்பட்ட சி.பி.எஸ்.இ. மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.


மாநில பாடத்திட்டம்:


அதேநேரம், மாநில பாடத்திட்டத்தில் விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கை என்பது அதற்கு சரிபாதியாகவே உள்ளது.  மாநில பாடத்திட்டத்தில் பயின்று நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி, அந்த மாநிலத்தை சேர்ந்த  மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 2 லட்சத்து 57 ஆயிரம் பேர் நடப்பாண்டு நீட் தேர்வ்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். மாநில பாடத்திட்டத்தில் பயின்று நீட் தேர்வுக்கு அதிகளவில் விண்ணப்பித்தவர்களின் பட்டியலில்,  தொடர்ந்து 5 ஆண்டுகளாக மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது.


தமிழ்நாடு 3வது இடம்:


தொடர்ந்து, கர்நாடக மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 1 லட்சத்து 22 ஆயிரம் பேரும், தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அடுத்ததாக, உத்தரபிரதேச மாநில பாடத்திட்டத்தில் படித்த 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த பட்டியலில் கேரளா மற்றும் பீகார் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


யார் கடைசி இடம்?


மாநில பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வு எழுதியவர்கள் பட்டியலில் திரிபுரா மாநிலம் தான் கடைசி இடத்தில் உள்ளது. அதன்படி வெறும் 1,683 பேர்தான் அத்தேர்வை எழுதியுள்ளனர். தொடர்ந்து மிசோரமை சேர்ந்த 1,844 பேரும், மேகாலயாவை சேர்ந்த 2,300 பேரும், நாகாலாந்தை சேர்ந்த 2,422 பேரும் மட்டுமே மாநில பாடத்திட்டங்களில் படித்து நீட் தேர்வு எழுதியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது. 


நடப்பாண்டு விவரங்கள்:


நடப்பாண்டு நீட் தேர்வு எழுதிய மொத்தம் 20 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்களில், 11 லட்சத்து 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதிகபட்சமாக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த 1 லட்சத்து 39 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து மகாராஷ்டிராவில் 1 லட்சத்து 31 ஆயிரம் பேரும், ராஜஸ்தானை சேர்ந்த 1 லட்சத்திற்கு அதிகமானோரும்தேர்ச்சி பெற்றுள்ளனர். கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த தலா 75 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகம் பேர் தேர்ச்சி பெற்ற முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பிடித்துள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற முதல் 50 மாணவர்களில் 8 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள். 7 பேர் ராஜஸ்தானையும், 6 பேர் தமிழ்நாட்டையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.