காங்கிரஸ் பெண் எம்எல்ஏவை மேடையில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கொன் மாவட்டம் குஜி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷகினி சந்து சாஹூ. அவர் நேற்று மாலை தன் தொகுதிக்குட்பட்ட ஜோத்ரா பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பல்வேறு நலத்திட்டங்கள், அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றை திறந்து வைக்க இருந்தார். இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன் அவர் மேடையில் அமர்ந்து இருந்தார். அப்போது அருகில் காளீஸ்வர் என்ற நபரும் அமர்ந்து இருந்தார். அப்போது யாரும் எதிர்ப்பாராத வகையில் காளீஸ்வர், அங்கு அமர்ந்திருந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ ஷகினி சந்து சாஹூவை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில் சட்டமன்ற உறுப்பினர் ஷகினிக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தை பார்த்து அதிர்ந்துபோன காவல் துறையினர் உடனடியாக ஷகினி சந்து சாஹூவை பாதுகாப்பாக அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர். அங்கிருந்து அவர் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர், ஷகினி மீது தாக்குதல் நடத்திய காளீஸ்வர் என்பவரை கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் அரசியல் நோக்கம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.