காவிரி விவகாரம், தமிழ்நாடு - கர்நாடக மாநிலகளுக்கிடையே மீண்டும் பிரச்னையைாக வெடித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை. அதன்பிறகு, கர்நாடக அணைகளில் இருந்து 15 நாள்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.  


மீண்டும் விஸ்வரூபம் எடுத்த காவிரி விவகாரம்:


காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கேட்டு முதலில் தண்ணீரை திறந்து விட்டாலும் பின்னர், தண்ணீர் தருவதை கர்நாடக நிறுத்தியது. பின்னர், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் தண்ணீர் தரப்பட்டது. 15 நாள்களுக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற கெடு இன்றோடு முடிவடைந்துள்ளது.


இச்சூழலில், நாளை தொடங்கி வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை, 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்குமுறை குழு உத்தரவிட்டுள்ளது. இது, தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் நிம்மதியை தந்துள்ள நிலையில், ஒழுங்குமுறை குழுவின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று தெரிவித்துள்ளார்.


உச்ச நீதிமன்றத்தை நாடும் கர்நாடகா:


சாமராஜநகரில் உள்ள எம்.எம்.ஹில்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் நேற்றைய உத்தரவு குறித்து சட்ட நிபுணர்களுடன் விவாதித்திருந்தேன். அவர்களின் கருத்தின் அடிப்படையில், குழுவின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.


தமிழ்நாட்டில் திறந்து விட கர்நாடகாவிடம் தண்ணீர் இல்லை. இந்த ஆண்டு மழை பெய்யாததால் மாநிலத்தில் உள்ள 195 தாலுகாக்கள் வறட்சியில் தத்தளிக்கின்றன" என்றார். காவிரி விவகாரத்தை முன்வைத்து வரும் 29ஆம் தேதி பந்த்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து பேசிய அவர், ஜனநாயகத்தில் போராட்டங்கள் அனுமதிக்கப்படுவதாக கூறினார்.


இருப்பினும், பந்த்-க்கு எதிரான உச்ச நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்ட அவர், "உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மாநில அரசு மனதில் வைத்துக் கொள்ளும். காவிரி விவகாரத்தில் பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்து வருகின்றன" என்றார்.


கர்நாடகாவில் மீண்டும் பந்த்:


சாமராஜநகருக்குச் சென்றால் முதலமைச்சர்கள் ஆட்சியை இழந்துவிடுகின்றனர் என பேசப்படுவதற்கு பதிலடி தந்த அவர், "அதனால்தான் முந்தைய ஆட்சிக் காலத்தில் முதலமைச்சரான பிறகு சாமராஜநகருக்கு வந்தேன். சாமராஜநகருக்கு 12 முறை வந்துள்ளேன். ஐந்தாண்டு காலம் முதலமைச்சர் இருக்கையில் உறுதியாக இருந்தேன். அந்த கட்டுக்கதை இப்போது சுக்குநூறாக்கப்பட்டுள்ளது" என்றார்.


காவிரி விவகாரத்தை முன்வைத்து நேற்று கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பந்த் நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பந்த் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இச்சூழலில், வரும் வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.