உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம். ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. 


மத்திய அரசு - நீதித்துறை இடையே உரசல்:


இதற்கிடையே, கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. 


இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில், கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் தொடர் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர்.


"திறமைசாலிகள இழந்துட்டு இருக்கோம்" 


இந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திறமையானவர்களை நீதித்துறை இழந்து வருவதாகவும் கடந்த 10 மாதங்களில், உயர் நீதிமன்றங்களுக்கு பரிந்துரைத்த 70 நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு நிலுவையில் வைத்திருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  


"கொலீஜியம் பரிந்துரைகளின் மீது முடிவுகளை எடுக்காமல் மத்திய அரசு பல மாதங்களாக காலத் தாமதம் செய்து வருவதால் நீதிபதிகளாக பரிந்துரைக்கப்படுபவர்கள் தங்களின் முயற்சிகளை விட்டுவிடுகின்றனர். இதனால், நீதித்துறை திறமையானவர்களை இழுந்து வருகிறது" என நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதான்சு துலியா தெரிவித்துள்ளனர்.


தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "பல திறமையான சட்ட வல்லுநர்கள் நீதிபதியாவதற்கு தங்களின் வழக்கறிஞர் பணியை தியாகம் செய்ய தயாராக உள்ளனர். ஆனால், அரசாங்கத்தின் பாகுபாட்டான செயலால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தெரியாத காரணங்களுக்காக ஒரு சிலருக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்படுகிறது.


"காலியாக உள்ள எழுபது பணியிடங்கள்"


நீதிபதியாக நினைக்கும் நபர்களின் எஎண்ணிக்கை குறைந்து வருகிறது. நாங்கள் முயற்சி செய்கிறோம். சிறந்த திறமைசாலிகளை பெற முயற்சிக்கிறோம். ஆனால், பாகுபாட்டால் நல்ல திறமையை நீதித்துறை இழந்துவிட்டது. அவர்கள் வெளியேறுகிறார்கள், பின்வாங்குகிறார்கள். நான் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், அவர்கள் விலகிய பிறகு நாங்கள் ஒன்று, இரண்டு நல்லவர்களை இழந்துவிட்டோம்.


உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எழுபது பணியிடங்கள் காலியாக உள்ளன. உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகளைப் பெற்றவுடன், நீங்கள் சில அடிப்படைச் செயலை செய்து அதை உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு அனுப்ப வேண்டும். அதைக்கூட நீங்கள் செய்யவில்லை. அவர்களைப் பற்றிய உங்கள் பார்வை தெரிந்துவிட்டால் நாங்கள் [உச்ச நீதிமன்ற கொலீஜியம்] முடிவை எடுத்துவிடுவோம். நீங்கள் அதைச் செய்யவில்லை" என தெரிவித்தனர்.