வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாம்பழத்தை போலீஸ்காரர் ஒருவர் திருடிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. அவர் திருடிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி அந்த போலீஸ்காரரை அம்பலப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளியில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் இடுக்கி ஏஆர் முகாம் காவல்நிலையத்தைச் சேர்ந்த சிஹாப் என்பது தெரியவந்துள்ளது.
சிஹாப் நேற்றிரவு தனது இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு பழக்கடையை தாண்டிச் சென்றார். அப்போது அங்கு ஆள் யாரும் இல்லாததை உணர்ந்து அவர் அங்கிருந்து மாம்பழங்களை திருடினார். அவர் ரூ.600 மதிப்புள்ள 10 கிலோ எடை கொண்ட மாம்பழங்களை திருடிச் சென்றார்.
அந்த மாம்பழங்களை அவர் வண்டிக்கு அடியில் உள்ள ஸ்டோரேஜ் பகுதியில் போடும் போது கூட அவர் சுற்றும்முற்றும் யாரேனும் பார்க்கிறார்களா எனப் பார்க்கிறார். ஆனால் பிக்பாஸ் போல் ஒரு சிசிடிவி கேமரா அத்தனையையும் பதிவு செய்ததை அவர் காணவில்லை.
முதலில் அந்தப் போலீஸ் ஹெல்மெட்டும் ரெயின் கோட்டும் அணிந்திருந்ததால் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்த எண் அவரை அடையாளம் காட்டிவிட்டது. இது தொடர்பாக காஞ்சிரபள்ளி காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. போலீஸார் அவரைப் பிடிக்க போலீஸார் தேடுதலைத் தொடங்கியுள்ளனர்.
வீட்டில் ஃபேன் திருடிய பீஹார் போலீஸார்:
இதேபோல் பீஹார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் போலீஸ் குழு ஒன்று இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தது. அப்போது ஒரு வீட்டின் வராண்டாவில் ஒரு பேன் இருப்பதை அவர்கள் கவனிக்கின்றனர். உடனே அவர்கள் அந்த ஃபேனை அங்கிருந்து எடுத்துச் செல்கின்றனர். இவையனைத்தும் ஒரு சிசிடிவி வீடியோ காட்சியில் பதிவானது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
ஃபேனின் உரிமையாளர் சுபோத் சவுத்ரி போலீஸ் நிலையத்தில் தனது ஃபேன் காணாமல் போனது குறித்து புகார் கொடுத்தார். ஆனால் திருடியதே தாங்கள் என்பதால் எப்படி புகாரை எடுப்பார்கள். அவர் காவல்நிலையத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார். அப்போது அவருக்கு காரணம் தெரியவில்லை. பின்னர்தான் அவருக்கு அந்த ஏரியாவில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் காவலர்கள் தான் திருடினார்கள் என்பது தெரியவந்தது. பின்னர் அவர் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றார். அங்கு சிசிடிவி ஆதாரத்தைக் காட்டி ஃபேனை திரும்பி வாங்கிவந்தார். வேலியே பயிறை மேயும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்துதான் வருகிறது.
திருட்டுக்கு தண்டனை என்ன?
திருட்டு குற்றத்தை யார் புரிந்தாலும் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம். சட்டத்தின் முன் அனைத்து மக்களும் சமம் என்ற அரசியல் சாசன வலியுறுத்தலினால் திருட்டில் ஈடுபட்டது போலீஸ் என்றாலும் கூட சிறைத்தண்டனை பெற தகுதியானவரே.