ட்விட்டரில் வெளியாகி உள்ள பதைபதைக்கும் வீடியோ ஒன்றில், விபத்திலிருந்து பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்புவது பதிவாகியுள்ளது. இந்திய காவல் பணி அலுவலர் வி.சி. சஜ்ஜினர், இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.






ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு கருத்து பதிவிட்டுள்ள அவர், சாலைப் பாதுகாப்பு எவ்வளவு காலம் கவனக்குறைவுடன் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் மக்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். "மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். ஆனால், எவ்வளவு காலம் நாம் அதிர்ஷ்டத்தை நம்பி இருக்க முடியும்? சாலைகளில் பொறுப்பாக இருங்கள்" என்றும் சஜ்ஜினர் அறிவுறுத்தி உள்ளார்.


வீடியோவின் தொடக்கத்தில் பரபரப்பான சாலை காண்பிக்கப்படுகிறது. அதில், ஒரு பெண் தெருவை தாண்டி, நின்றுகொண்டிருந்த ஆட்டோரிக்ஷாவை கடந்து செல்வதை காணலாம். சிறிது நேரம் கழித்து, வேகமாக வந்த வெள்ளை நிற கார் பின்னால் இருந்து வந்து, ஆட்டோரிக்ஷா மீது மோதுகிறது. இதையடுத்து, ஆட்டோ கவிழ்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.


சில நொடிகளிலேயே, கார் கம்பத்தில் மோதுவதையும் அப்போது ஆட்டோரிக்ஷா திரும்பி மறுபுறம் விழுவதையும், இதற்கு நடுவே சென்று கொண்டிருந்த பெண் விபத்திலிருந்து தப்புவதும் மேராவில் பதிவாகியுள்ளது. சாலையில் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் என்றும் சட்டங்களைக் கடுமையாக்கவும் சமூக வலைதள பயனர்கள் சிலர் மக்களை வலியுறுத்தி உள்ளனர்.






அதில் ஒரு பயனர், "வாகனம் ஓட்டும்போது பொறுப்பாக இருக்க வேண்டும். சாலையில் கடக்கும்போது பொறுப்பாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, சாலையில் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், "குடிமக்கள் மற்றவர்களின் பாதுகாப்பையும் தங்கள் பொறுப்பு என்பதை உணர வேண்டும். 


குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, சிறார்கள் வாகனம் ஓட்டுவது, அவசரமாக வாகனம் ஓட்டுவது போன்றவற்றை கடுமையாக எதிர்க்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் வெளியானதிலிருந்து கிட்டத்தட்ட 40,000 பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.