உத்தரப் பிரதேசம் வாரணாசியில் பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து எஸ்யூவி காரில் வந்த 4 பேர் அவரை கடத்த முயற்சி செய்துள்ளனர்.


 






இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு ஷிவ்புரியின் தர்னா பகுதியில் நிகழ்ந்துள்ளது. வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெட்ரோல் பம்ப் உரிமையாளரைக் கடத்த முயன்றனர். ஆனால், ஊழியர்கள் தலையிட்டதையடுத்து அவர்களது கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.


குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் பெட்ரோல் பம்ப் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவில் காணலாம். அதே நேரத்தில், அவருடன் வந்த மற்ற இருவர் எஸ்யூவி வாகனத்தை ஓட்டும் அவர்களது நான்காவது கூட்டாளிக்கு சிக்னல் கொடுப்பதையும் வீடியோவில் காணலாம்.


வாகனம் நெருங்கும்போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் பெட்ரோல் பம்ப் உரிமையாளரை எஸ்யூவிக்குள் தள்ள முயற்சிக்கிறார். இதையடுத்து, பெட்ரோல் பங்க் பாதுகாவலர்கள், ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து உரிமையாளரை காப்பாற்றிவிடுகின்றனர். மற்ற வாடிக்கையாளர்களும் உரிமையாளரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டது வீடியோவில் பார்க்கலாம்.


 






இருப்பினும், பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வாரணாசியில் பெட்ரோல் பங்க் உரிமையாளரை கடத்த ஒரு கும்பல் முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.