கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். கூட்டாட்சி மற்றும் மத்திய - மாநில உறவு என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு:
”இந்தியா என்பது ஒரு தனி அரசாங்கம் அல்ல, பல மாநிலங்களைக் கொண்ட ஒன்றியம். இந்தியாவை யூனியன் (ஒன்றியம்) என்று அழைப்பது தவறல்ல. அரசியலமைப்பு கூட இந்தியாவை ஒன்றியம் என்று தான் வரையறுக்கிறது. நான் இந்த வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்த பிறகு சிலர் அதை தேச விரோத செயலாகப் பார்த்தார்கள். அவர்களால் அரசியலமைப்பில் இருக்கும் சொல்லாடலைக் கூட ஜீரணிக்க முடியவில்லை.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களைக் கொண்ட ஒரு ஒன்றியமாய் இருக்கும் என்று தான் உள்ளது. அதைத் தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை அல்ல. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திய ஒன்றியத்துக்குள் உள்ளடங்கிய அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். மாநிலங்களைக் காப்பாற்றுவது என்பது மாநில மொழியை காப்பாற்றுவது.
மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் தேசிய இனங்களைக் காப்பாற்றுவது. மாநிலங்களின் பண்பாட்டைக் காப்பாற்றுவது. அந்த மாநில மக்களுடைய உரிமைகளைக் காப்பாற்றுவது. மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால் தான் இந்தியா காப்பாற்றப்படும். ஒரே மாதிரியாக இருப்பது ஒற்றுமை அல்ல.
இந்தியா விடுதலை அடையும்போது இந்தியா ஓராண்டு கூட ஒற்றுமையாக இருக்காது எனக் கூறப்பட்டது. ஏனென்றால் பல்வேறு இனம், மொழி, மதம், பண்பாடு சார்ந்த மக்கள் வாழும் நாட்டை இவர்களால் ஒற்றுமையுடன் காப்பாற்ற முடியாது எனக் கூறப்பட்டது.
ஆனால் 75 ஆண்டுகளைக் கடந்தும் ஒற்றுமையுடன் ஒன்றுபட்ட இந்தியாவாக இருப்பதற்கு காரணம், இந்த வேற்றுமைகளை உள்ளத்தில் தாங்கி ஒற்றுமையாக இருப்பதால் தான். ஒரு சில மாநிலங்களில் மட்டும் இணைந்து செயல்படுவது போதாது, நாடு முழுவதும் ஒன்றிணைந்து செயல்படும் நிலை உருவாக வேண்டும்.
இந்தியா முழுவதும் கூட்டாட்சி உருவாக வேண்டும். மாநிலத்தில் சுயாட்சி நிலவ வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.