தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி பணம் பறித்தததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, ஜனஅதிகார சங்கர்ஷ சங்கதனே அமைப்பை சேர்ந்த ஆதர்ஷ் ஐயர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


நிர்மலா சீதாராமன் மட்டுமின்றி பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான நட்டா,  கர்நாடக முன்னாள் பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல், அக்கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவர் பி. ஒய். விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


நிர்மலா சீதாராமன் மீது பரபரப்பு புகார்:


இதுதொடர்பாக திலக்நகர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் நிர்மலா சீதாராமனின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இவரை தவிர அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலரின் பெயரும் எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ளது. மற்றபடி பெயரை குறிப்பிடாமல் பாஜக தலைவர்கள் என எஃப்.ஐ.ஆரில் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


அமலாக்கத்துறை நடத்திய சோதனையை மேற்கொள் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி அழுத்தம் தந்து ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்க வற்புறுத்தியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் தேசிய மற்றும் மாநில அளவிலான பாஜக தலைவர்களுக்கு பணம் கிடைத்துள்ளது.


தேர்தல் பத்திரம் சர்ச்சை:


தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் நோக்கங்களுக்காக கள்ளப் பணத்தை வாங்கி குவிப்பதை எளிதாக்கியது என்றும் இதில் நிர்மலா சீதாராமன், பிற மூத்த பாஜக தலைவர்கள் ஈடுபட்டனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக, இவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், தேர்தல் பத்திரங்கள் விவகாரம் ஒரு கொள்கை விவகாரம் என்றும் விளக்கம் அளித்துள்ளது. 


தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்படும் பெரும்பாலான நன்கொடை பாஜகவுக்கு செல்வதாக புகார் எழுந்தது. குறிப்பாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நன்கொடையில் 55 சதவிகிதம் பாஜகவுக்கு சென்றதாக தேர்தல் ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன. இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.