சனாதானம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழ்நாடு அரசின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


உதயநிதி பேசியது என்ன? 


நேற்று (செப்டம்பர் 2) சென்னை காமராஜர் அரங்கில் திமுக கழக இளைஞர் அணிச் செயலாளரும், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற   தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. நீங்கள்  `சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் `சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.


உதாரணமாக கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரியம் ஆகும். எனவே இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள்.  சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான்.


சனாதனத்தை விமர்சித்த உதயநிதி 


சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் வேறு ஒன்றும் கிடையாது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது.யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்.


முன்பெல்லாம், இங்கு இராமயணமும், மகாபாரதமும்தான் மக்களுக்கான கலையாகவும், எழுத்தாகவும் பேசப்பட்டு வந்தன. திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் வந்த பிறகுதான் மக்களுக்கு, `திருக்குறள்’, `சிலப்பதிகாரம்’, `மணிமேகலை’ எல்லாம் சமுகத்தில் பேசு பொருளாக பேசப்பட்டன. கலைஞர் அவர்கள் `குறளோவியம்’ எழுதினார். `பூம்புகார்’ என்ற திரைப்படத்தின் கதை வசனம் வாயிலாக சிலப்பதிகாரத்தின் கதையைச் சொன்னார்.


மனிதர்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என்றுதான் வள்ளலார், வடலூரில் அணையா அடுப்பைப் பற்ற வைத்தார். வள்ளலார், அன்றைக்குப் பற்ற வைத்த அந்த அடுப்பு இன்னமும் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கிறது.வள்ளலார் ஏற்றிய அந்த அடுப்பிலிருந்து நெருப்பை எடுத்துத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களில் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் அடுப்பைப் பற்ற வைத்திருக்கிறார்.


மக்களை ஜாதிகளாகப் பிரித்து தனித்தனியாக இருக்கவேண்டும் என்று சொன்னதுதான் சனாதனம். ஆனால், கலைஞர் அவர்களோ எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி அமர்த்தி அந்த இடத்திற்கு, `சமத்துவபுரம்’ என்று பெயர் வைத்து சனாதனத்திற்குச் சம்மட்டி  அடி கொடுத்தவர்தான் நம்முடைய கலைஞர் அவர்கள். ஆகவே சனாதனம் வீழட்டும், திராவிடம் வெல்லட்டும் என்று கூறியிருந்தார். 


டெல்லி வழக்கறிஞர் புகார்


இந்நிலையில் சனாதன தர்மத்தை விமர்சித்து பேசியதாக அமைச்சர் உதயநிதி மீது உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி போலீசில் புகாரளித்துள்ளார்.