இந்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கடந்தாண்டு மத்திய அரசாங்கம் இந்தியாவின் மிகப்பெரிய இயக்குனரான ரத்தன் டாடாவின் டாடா குழுமத்திடம் கடந்தாண்டு விற்பனை செய்தது.
இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்திடம் ஜனவரி 27-ந் தேதி ஒப்படைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், சில காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் நாளை ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
முன்னதாக, ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. அந்த மின்னஞ்சலில் புதிய உரிமையாளர்கள் நிர்வாகத்தை மேற்கொள்ள இருப்பதற்கு வியாழக்கிழமை தயாராக இருக்கும்படி அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்தது. மேலும், அந்த மின்னஞ்சலில் நேர்த்தியாக உடை அணிந்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரத்தன் டாடாவிடம் இருந்து சிறப்பு ஆடியோ குறுஞ்செய்தியும் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஏர் இந்தியாவின் இருப்புநிலை அறிக்கை கடந்த 20-ந் தேதி நிலவரம் வரை, கடந்த 24-ந் தேதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இருப்பு நிலை அறிக்கைகளை டாடா குழுமத்தின் சார்பில் மதிப்பாய்வு செய்யும் பணிகள் நடைபெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபோய் டாடாவால் 1932ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஏர் இந்தியா தொடங்கப்பட்டது. டாடா ஏர்லைன்ஸ் தனது சேவையை முதன்முதலில் இன்றைய பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து பாம்பே(இப்போது மும்பை)க்கு தொடங்கியது. அந்த விமானத்தில் சில பயணிகளும், கடிதங்களும் கொண்டு வரப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னை புறப்பட்டுச் சென்றது. பின்னர், 1939ம் ஆண்டு திருவனந்தபரம், டெல்லி, கொழும்பு, லாகூருக்கு இயக்கப்பட்டது.
1946ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை பொது நிறுவனமாக டாடா மாற்றினார்.பின்னர், ஏர் இந்தியா நிறுவனம் என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர், இரண்டு ஆண்டுகளில் கெய்ரோ, ஜெனிவா மற்றும் லண்டன் நகரங்களுக்கு மும்பையில் இருந்து விமானம் இயக்கப்பட்டது.
1953ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு அனைத்து விமான சேவைகளையும் அரசுடைமையாக்கியது. இந்தியன் ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமான சேவைகளையும், ஏர் இந்தியா சர்வதேச விமான சேவைகளையும் வழங்கியது. 1994ம் ஆண்டு முதல் மீண்டும் தனியார் விமான சேவைகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டது. இதனால், ஏர் இந்தியா சேவை பாதிப்பைச் சந்திக்க நேரிட்டது. பின்னர், இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா இணைக்கப்பட்டது. இருப்பினும் பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக கடந்தாண்டு ஏர் இந்தியாவை மத்திய அரசு டாடா குழுமத்திடமே விற்பனை செய்தது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்