குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்ட நபர் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம், ராஜூலா தாலுகா, பெராய் கிராமத்தைச் சேர்ந்த ஷிவபாய் ராம் என சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 


அவர் ஏற்கெனவே ஃபேஸ்புக்கில் செய்த பதிவுகளுக்காகத்தான் கைது செய்யப்பட்டார் எனவும் அது அவதூறான தொனியைக் கொண்டிருந்தது; சமீபத்திய கருத்துக்கள் வெளிவந்தபோதுதான் வெளிச்சத்திற்கு வந்ததாக காவல்துறை தெளிவுபடுத்தியது.




எனினும், ஹெலிகாப்டர் விபத்தில் 12 பேருடன் இறந்த ஜெனரல் ராவத்துக்கு எதிராக அவர் கூறியதாகக் கூறப்படும் கருத்துக்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 


இதுகுறித்து காவல்துறை உதவி ஆணையர் ஜிதேந்திர யாதவ் கூறுகையில், “ராம் தனது முந்தைய பதிவுகளுக்காக கைது செய்யப்பட்டார்.  அவர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்து தெய்வங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். அவர் மீது 2 பிரிவுகளின் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 


153-ஏ பிரிவின் கீழ் இருவேறு தரப்புக்கிடையே பகைமையை தூண்டுதல், 295-ஏ பிரிவின் கீழ் மதத்தை அவமதிப்பது மற்றும் மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில், “ஜெனரல் பிபின் ராவத் குறித்து சில இழிவான பதிவுகளை பகிர்ந்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் எங்கள் ரேடாரின் கீழ் வந்தார். அவரது டைம்லைனை ஸ்கேன் செய்ததில், அவர் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களைப் பற்றி ஆட்சேபனைக்குரிய பதிவுகளை பகிர்ந்துள்ளார் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். கடந்த காலங்களில் அவர் தனது ஃபேஸ்புக் பதிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். 




இதையடுத்துதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னர், சைபர் கிரைம் அதிகாரிகள் ராமை அவரது சொந்த இடமான அம்ரேலியில் இருந்து பிடித்து இங்கு அழைத்து வந்தனர். விசாரணையில் ராம் அரசியலில் ஈடுபாடு கொண்டவர் எனவும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை பகிர்வதன் மூலம் வெளிச்சத்தில் இருக்க விரும்பியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.


ஷிவபாய் ராம் 2010 - 2014 ஆம் ஆண்டுகளில் தனது கிராமத்தில் தலையாரியாக பணியாற்றினார். வரும் ஆண்டுகளில் தலையாரி ஆக வேண்டும் என்ற எண்ணத்தால் சமூக வலைதளங்கள் மூலம் முக்கிய பிரச்னைகளை எழுப்பி மக்களின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார்” என ஜிதேந்திர யாதவ் தெரிவித்தார். 


இதேபோல், தமிழகத்தில் பிபின் ராவத் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 




இதனிடையே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜெனரல் பிபின் ராவத் மறைவை கொண்டாடும்வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த 21 வயதான ஜவாத் கான் என்பவரை டான்க் போலீசார் கைது செய்துள்ளனர்.