உலகின் வலுவான ராணுவங்களில் ஒன்று இந்திய ராணுவம். இந்திய ராணுவ வீரர்கள் நாட்டின் பல பதற்றத்திற்குரிய பகுதிகளிலும் உயிரை பணயம் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இமயமலையில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இடம் சியாச்சின் ஆகும்.
உலகின் மிக உயரமான ராணுவ முகாம்:
உலகின் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள ராணுவ முகாம் சியாச்சின் கிளாசியர். இந்திய ராணுவ வீரர்கள் மைனஸ் டிகிரி குளிரிலும் இங்கு 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆண்கள் மட்டுமே சியாச்சினில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த ராணுவ முகாமில் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி இணைந்துள்ளார். அவர் கேப்டன் சுப்ரிதா ஆவார்.
சியாச்சின் ராணுவ முகாமானது மிகவும் கடினமான முகாம் ஆகும். குளிர், பனிகளுக்கு நடுவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது எப்போதும் சவாலானதாக இருக்கும். இந்த சூழலில், அங்கு கேப்டன் சுப்ரிதா முதல் பெண் அதிகாரியாக பணியில் இணைந்திருப்பதற்கு நாட்டு மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இங்கு பணியில் இணைவதற்காக சியாச்சின் சிறப்பு பள்ளியில் ஒரு மாத காலம் கேப்டன் சுப்ரிதா பயிற்சி மேற்கொண்டார். அங்கு அவருக்கு பனிச்சறுக்குகளில் ஏறுவது எப்படி? பனிகளில் இருந்து தாவுவது எப்படி உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
முதல் பெண் அதிகாரி:
சியாச்சின் ராணுவ முகாமில் இணைந்துள்ள கேப்டன் சுப்ரிதா கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை திருமல்லேஸ் மைசூர் அருகே போலீஸ் எஸ்.ஐ.யாக உள்ளார். சட்டப்படிப்பை முடித்துள்ள சுப்ரிதா கடந்த 2021ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் லெப்டினன்டாக இணைந்தார். ராணுவ வான்வெளி பாதுகாப்பு பிரிவு கேப்டனாக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார்.
மேலும், இந்தாண்டு நடைபெற்ற குடியரசு தினத்தில் கேப்டன் சுப்ரிதாவும் அவரது கணவர் மேஜர் ஜெர்ரி ப்ளெய்சேவும் ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்திய ராணுவ வரலாற்றில் தம்பதிகள் அணிவகுப்பில் பங்கேற்றது இதுவே முதன்முறை ஆகும். கேப்டன் சுப்ரிதா என்.சி.சி.யில் இருந்தபோது 2016ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகவும் உயரமான ராணுவ முகாமில் பணிபுரியும் முதல் பெண்ணான சுப்ரிதாவுக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.