சமீப காலமாக, விமானத்தில் தொடர் சர்ச்சைகள் அரங்கேறி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லவிருந்த விமானத்தில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


அறுவை சிகிச்சை செய்து கொண்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண், விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார்.


இருக்கையின் மேல் உள்ள கேபினில் தன்னுடைய கை பையை வைக்க உதவுமாறு அந்த பெண் பயணி, விமான பணிப்பெண்ணிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம், ஜனவரி 30ஆம் தேதி நடந்துள்ளது.  


இது தொடர்பாக, பயணி மீனாட்சி சென்குப்தா, விமான பணிப்பெண்ணுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அதில், 5 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ள தனது கைப்பையை கேபினில் வைப்பதற்கு உதவ அவர் மறுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். "சக்கர நாற்காலி உதவியை கோரியிருந்தேன்.


நானும் ஒரு பிரேஸ் அணிந்திருந்தேன். எனவே, எனக்கு சில அசௌகரியங்கள் இருப்பதை அனைவரும் அறிவார்கள். ஏனென்றால், என்னால் கைகளில் எந்த எடையையும் சுமக்க முடியாது. நான் பலவீனமாக இருந்தேன். நடந்து சென்று என்னை நானே கஷ்டப்படுத்த விரும்பவில்லை. 


விமான நிலைய அதிகாரிகள், மிகவும் உறுதுணையாக இருந்து, விமானத்தில் ஏறவும், இருக்கையின் ஓரத்தில் எனது கைப்பையை வைக்கவும் எனக்கு உதவினார்கள். விமானத்தின் உள்ளே சென்றதும், விமானப் பணிப்பெண்ணுடன் நான் உரையாடினேன். என் உடல்நிலையை அவர்களிடம் விளக்கினேன்.


அவர்களில் யாரும் எனது கைப்பையை வேறு எங்காவது வைக்க வேண்டும் என்பது பற்றி என்னிடம் குறிப்பிடவில்லை. விமானம் புறப்படத் தொடங்கியதும், கேபின் விளக்குகள் அணைக்கப்பட்டன. அப்போது, ஒரு விமானப் பணிப்பெண் எனது கைப்பையை இருக்கை மேல் உள்ள கேபினில் வைக்க சொன்னார். 


அதை வைக்க எனக்கு உதவுமாறு நான் அவரிடம் கோரினேன். ஆனால், அவர் அதை செய்ய மறுத்துவிட்டார். அதைச் செய்வது தன்னுடைய வேலை அல்ல என்று என்னிடம் சொன்னார். திரும்பத் திரும்ப அவரிடம் உதவி செய்யச் சொன்னேன். ஆனால், என்னையே அதைச் செய்யும்படி சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.


நான் முறையாக நடந்து கொள்ளவில்லை எனக் கூறி, விமானத்தில் இருந்து இறங்க வேண்டும் என்றார்கள். என்னை வெளியேற்றும் முடிவில் அவர்கள் கூட்டாக இருந்தனர்" என்றார்.


இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. மேலும் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளுமாறு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) மற்றும் டெல்லி மகளிர் ஆணையம் (DCW) ஆகியவற்றை மக்கள் வலியுறுத்தினர்.


இதேபோல, சமீபத்தில், விமானப் பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் தவறாக நடந்து கொண்டதால் அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.