தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி தனது மாநிலத்திற்கு வெளியே முதல் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிராவின் நாந்தேட்டில் நடத்தியது.
கட்சிக்கு புதியவர்களை ஈர்க்கும் நோக்கிலும், கட்சியை மகாரஷ்டிராவில் விரிவுபடுத்தும் நோக்கத்திலும் இக்கூட்டம் நடத்தப்பட்டதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தெலங்கானாவுக்கு அருகாமையில் இருப்பதாலும், தெலுங்கு பேசும் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாலும் நாந்தேட் தேர்வு செய்யப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்டை மாநிலத்தில் உள்ள பல கிராமங்கள் தெலங்கானாவுடன் இணைக்க விரும்புவதாகவும், தனது அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களால் ஈர்க்கப்படுவதாகவும் சந்திரசேகர ராவ் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று ( ஞாயிற்று கிழமை ) மதியம் நடைபெற்ற கூட்டத்தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் பேசியதாவது,
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள், ஆனால் மக்கள் தோல்வியடைகிறார்கள்.
இந்த முறை, விவசாயிகள் அரசாங்கம்
அதனால்தான் பி.ஆர்.எஸ் கட்சியின் கோசமாக 'அப்கி கி பார், கிசான் சர்க்கார்' (இந்த முறை, விவசாயிகள் அரசாங்கம்) என வைக்கப்பட்டுள்ளது. நாம் ஒன்றுபட்டால், அது சாத்தியமற்றது அல்ல. நமது நாட்டில், விவசாயிகள் 42 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர், அதனுடன் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டால், அது 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும், இது அரசாங்கத்தை அமைக்க போதுமானது. சுதந்திரமடைந்த 75 ஆண்டுகள் ஒரு நீண்ட காலம். இன்று, நேரம் வந்துவிட்டது, விவசாயிகளும் விதிகளை எழுதவும் உருவாக்கவும் முடியும்,"
தண்ணீர் பற்றாக்குறை ஏன்?
மகாராஷ்டிராவில் கிருஷ்ணா, கோதாவரி போன்ற பல நதிகள் ஓடுகின்றன. அப்படியிருந்தும் மகாராஷ்டிராவில் தண்ணீர் பஞ்சம் ஏன் நிலவுகிறது. மகாராஷ்டிராவில் தண்ணீர் பற்றாக்குறை ஏன்? இதற்கு யார் பொறுப்பு? யோசித்துப் பாருங்கள். காங்கிரஸ் 54 ஆண்டுகளும், பாஜக 16 ஆண்டுகளும் நாட்டை ஆண்டன. இவ்விரு தரப்பினரும் குற்றவாளிகள். விவசாயிகளின் தற்கொலைகள் நிறுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் அரசு அமைந்தால் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும் என சந்திரசேகர ராவ் பேசினார்.
மகாராஷ்டிரா கூட்டம் மூலம், தனது கட்சியை தேசிய கட்சியாக விரிவுபடுத்த ஆரம்பித்துவிட்டார் கே.சி.ஆர். பாஜவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் கே.சி.ஆர். எந்த கட்சியை கூட்டணியாக சேர்க்க போகிறார், அவருக்கு கூட்டணி பலம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.