கடந்த சில ஆண்டுகளாகவே, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் விடுக்கும் விதமாக உள்ளது, சீனாவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி செயலிகள், யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி வருகிறது.


அதன் தொடர்ச்சியாக, 138 சூதாட்ட செயலிகளையும் 94 கடன் வழங்கும் செயலிகளையும் முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


அவசர கால அடிப்படையில், செயலிகளை மத்திய அரசு முடக்கி வருகிறது என உயர் மட்ட அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான விஷயங்களைக் கொண்டிருப்பதால், தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் 69வது பிரிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பிட்ட இந்த நிறுவனங்கள் மற்றும் நபர்களால் இயக்கப்படும் மொபைல் செயலிகள் மூலம் சிறிய அளவிலான கடன்களைப் பெறும் மக்களை மிரட்டி பணம் பறித்து, அவர்களை துன்புறுத்துதல் போன்ற பல புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த செயலிகள் யாவும் சீனர்களின் திட்டத்தில் வடிவமைக்கப்பட்டது. இந்த செயலிகளை சீனர்கள் உருவாக்கியிருந்தாலும் இந்தியர்களை இயக்குநர்களாக பணியமர்த்தி இருப்பது தெரிய வந்துள்ளது.


கிடைத்துள்ள தகவலின்படி, பணம் தேவைப்படும் தனி நபர்களை கவர்ந்திழுத்து அவர்களை கடன் வாங்க வைத்து ஆண்டுக்கு 3000 சதவிகிதம் வட்டி செலுத்த வைக்கப்படுகின்றனர்.


கடனாளிகள் முழு கடனையும் திருப்பிச் செலுத்த முடியாதபோது, ​கடன் வழங்கிய நிறுவனத்தை சேர்ந்தவர்கள் துன்புறுத்தத் தொடங்கினர். ஆபாசமான செய்திகளை அனுப்பியும், அவர்களின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக அச்சுறுத்தியும், தெரிந்தவர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிடுவதாக மிரட்டுகின்றனர்.


ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் கடன்களை பெற்றவர்கள் அல்லது சூதாட்ட செயலிகளில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொண்ட பிறகு இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. 


தெலங்கானா, ஒடிசா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களும், மத்திய உளவுத்துறை அமைப்புகளும் இந்த செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.


 






இந்த உள்ளீடுகளின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம், ஆறு மாதங்களுக்கு முன்பு 28 சீன கடன் வழங்கும் செயலிகளை ஆய்வு செய்யத் தொடங்கியது. இந்த சூழ்நிலையில்தான், 138 சூதாட்ட செயலிகளையும் 94 கடன் வழங்கும் செயலிகளையும் முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.