பாலியல் தொல்லையால் (போக்சோ) பாதிக்கப்பட்ட நபர் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக சாட்சியம் சொல்லாவிட்டால் அந்த நபருக்கு ஜாமீன் மறுக்க முடியாது என்று ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதி சஞ்சய் தர் கூறியதாவது: பாதிக்கப்பட்ட நபர் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் சொல்வதைத் தவிர்க்கும் காரணத்தினால் மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் மறுக்க இயலாது. குற்றஞ்சாட்டப்பட்ட நபர் அந்த குற்றம் நிரூபணமானால் பெறக்கூடிய தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தைத் தாண்டி விசாரணைக் கைதியாக வைத்திருக்க இயலாது. அவ்வாறாக காலம் கடக்கும் போது அந்த நபரை சொந்த ஜாமீனில் விடுவிக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.
போக்ஸோ சட்டப்பிரிவுகள் 363 மற்றும் 109 சி-ன் கீழே வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபர் ஒருவர் தொடர்ந்த ஜாமீன் மனுவை விசாரித்தபோது நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்த நபர் கடந்த ஏப்ரல் 24, 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் செப்டம்பர் 13, 2021ல் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை வழக்கின் விசாரணை நிறைவு பெறவில்லை.
விசாரணை நீதிமன்றம் இவருக்கு தொடர்ந்து ஜாமீன் மறுத்து வந்தது. பாதிக்கப்பட்ட நபரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படாததால் ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் அந்த நபர் செப்டம்பர் 30 2022ல் ஜம்மு காஷ்மீர் லடாக் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
உயர்நீதிமன்றமும் பாதிக்கப்பட்ட நபர் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த நபர் ஆஜராகி சாட்சியம் அளிக்கவில்லை.
இந்நிலையில் டிசம்பர் 2022ல் மனுதாரர் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் தான் உயர் நீதிமன்றமானது குற்றஞ்சாட்டப்பட்ட நபர் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிடைக்கக் கூடிய தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேல் விசாரணைக் கைதியாக இருக்க இயலாது. போக்ஸோ வழக்காக இருந்தாலும்கூட பாதிக்கப்பட்ட நபர் சாட்சியம் சொல்லவில்லை அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தினாலேயே ஜாமீன் மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
போக்ஸோ சட்டம் என்றால் என்ன?
போக்ஸோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012ல் உருவான சட்டமே போஸோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.
இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் பதிவான குற்றங்களின் சதவீதம் 35.3. அதில் உத்தர பிரதேசத்தில் 30, மத்திய பிரதேசத்தில் 18, ஹரியானா, கர்நாடகாவில் தலா 11, தமிழ்நாட்டில் 8, மகாராஷ்டிரா, தெலங்கானா, மேற்கு வங்கத்தில் தலா 6 சிறார் பாலியல் வல்லுறவு கொலை வழக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது. பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகள் தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தங்களிடம் சொல்லும் அளவுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக மாற வேண்டும். போக்ஸோ நீதிமன்றங்கள் வழக்குகளில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும். இவையெல்லாம் நடக்கும் பட்சத்தில் குற்றங்களும் குறையும்.