UNHRC: இந்திய சிறுபான்மையினர்கள் குறித்து பேசும் சுவிட்சர்லாந்து சொந்த நாட்டில் நிலவும் இனவெறி பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து அட்வைஸ்

ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், ஐ.நா. மனித உரிமைகள் கமிஷனரால் வாய்மொழியாக வழங்கப்பட்ட தகவல்கள் குறித்து பொதுவிவாதம் நடைபெற்றது. அப்போது கவுன்சிலில் பேசிய சுவிட்சர்லாந்து பிரதிநிதி, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும்,  "சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான உரிமைகளை நிலைநிறுத்தவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார். சுவிட்சர்லாந்து தற்போது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை வகிப்பதால், அந்த நாட்டின் கருத்துகள் கூடுதல் ராஜதந்திர மதிப்பைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

”இனவெறி பிரச்னையை கவனியுங்கள்”

சுவிட்சர்லாந்தின் கருத்துகளை நிராகரித்த இந்திய பிரதிநிதி க்ஷிதிஜ் தியாகி, “நெருங்கிய நண்பரும் கூட்டாளியுமான சுவிட்சர்லாந்து கூறிய ஆச்சரியமான, மேலோட்டமான மற்றும் தவறான கருத்துக்களுக்கு நாங்கள் பதிலளிக்க விரும்புகிறோம். UNHRC தலைமைப் பொறுப்பை வகிக்கும் சுவிட்சர்லாந்து, இந்தியாவின் யதார்த்தத்திற்கு நியாயம் செய்யாத, அப்பட்டமான பொய்யான கதைகளால் கவுன்சிலின் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அதற்கு பதிலாக, இனவெறி, முறையான பாகுபாடு மற்றும் வெளிநாட்டவர் வெறுப்பு போன்ற அதன் சொந்த சவால்களில் கவனம் செலுத்த வேண்டும். உலகின் மிகப்பெரிய, மிகவும் பன்முகத்தன்மை கொண்ட மற்றும் துடிப்பான ஜனநாயக நாடாக, பன்முகத்தன்மையை நாகரிகமாக ஏற்றுக்கொண்ட இந்தியா, இந்த கவலைகளை நிவர்த்தி செய்ய சுவிட்சர்லாந்திற்கு உதவ தயாராக உள்ளது" என பதிலடி தந்தார்.

பாகிஸ்தானுக்கு நச் பதிலடி

விவாதத்தின் போது இந்தியா மீது பாகிஸ்தான் வைத்த விமர்சனங்களுக்கும், க்ஷிதிஜ் தியாகி தக்க பதிலடி கொடுத்தார். அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்க பாகிஸ்தான் கவுன்சிலை தவறாகப் பயன்படுத்துகிறது என்றும்,  எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும், "சமீபத்தில் சொந்த தலைமையே தங்களை குப்பை லாரியுடன் ஒப்பிட்ட ஒரு நாட்டின் கருத்துகளை மீண்டும் ஒருமுறை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், இது இந்த புகழ்பெற்ற கவுன்சிலின் முன் மறுசுழற்சி செய்யப்பட்ட பொய்களையும் பழைய பிரச்சாரங்களையும் தொடர்ந்து தாக்கல் செய்யும் ஒரு நாட்டிற்கு கவனக்குறைவாக பொருத்தமான உருவகமாக இருக்கலாம்"  பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்கள் நடத்திய புல்வாமா, உரி, பதான்கோட், மும்பை தாக்குதல்களுடன்,  சமீபத்தில் நடந்த பஹல்காம் உள்ளிட்ட தீவிரவாத தாக்குதல்கள் மகிழ்ச்சியின் புல்வெளியை கொலைக்களமாக மாற்றின” என தியாகி கடுமையாக விமர்சித்தார்.

அபோதாபாத்தில் அமெரிக்காவின் அதிரடி தாக்குதலில் ஒசாமா பின்லேடன் இறக்கும் வரை பாகிஸ்தான் அவருக்கு அடைக்கலம் கொடுத்ததை சுட்டிக்காட்டிய தியாகி, பயங்கரவாத ஆதரவாளரிடமிருந்து நமக்கு எந்த பாடமும் தேவையில்லை. சிறுபான்மையினரைத் துன்புறுத்துபவரிடமிருந்து பிரசங்கங்கள் தேவையில்லை. அதன் சொந்த நம்பகத்தன்மையை வீணடித்த ஒரு அரசின் ஆலோசனையும் தேவையில்லை" என்று தியாகி கடுமையாக விமர்சித்தார்.