ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் BHIM-UPI இயங்குதளம் மூலம் செய்யப்படும் குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி மானியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.






இத்திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில், பாயின்ட் ஆஃப் சேல் (PoS) மற்றும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளை RuPay மற்றும் UPI ஐப் பயன்படுத்தி ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு நிதிச் சலுகைகள் வழங்கப்படும்.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. "ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் BHIM-UPI பரிவர்த்தனைகளை மேம்படுத்துவது தொடர்பான இன்றைய அமைச்சரவை முடிவால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியாவின் முன்னேற்றம் மேலும் வலுப்பெறும்" என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.


 இந்த திட்டம் ஒரு வலுவான டிஜிட்டல் பேமெண்ட் சூழலை உருவாக்க உதவும். இது UPI லைட் மற்றும் UPI123PAY ஆகியவற்றை சிக்கனமான மற்றும் user friendly டிஜிட்டல் கட்டணங்களாக ஊக்குவிக்கும்.  டிசம்பரில் மட்டும், UPI ஆனது ₹ 12.82 லட்சம் கோடி மதிப்பில் 782.9 கோடி டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனைகள் செய்து சாதனை படைத்துள்ளது. 2022-23 நிதியாண்டில் RuPay டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளை (P2M) மேம்படுத்துவதற்கான அங்கீகரிக்கப்பட்ட மானியத் திட்டமானது ₹ 2,600 கோடி நிதி செலவைக் கொண்டுள்ளது” என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. 


அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், இது MSMEகள், அமைப்புசாரா துறைகள் மற்றும் விவசாயிகளுக்கு டிஜிட்டல் கட்டண முறையைக் கொண்டு செல்ல உதவும் என்றார். டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், 2021-22 பட்ஜெட் அறிவிப்புக்கு இணங்க, மானியத் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.  


மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆண்டுக்கு ஆண்டு 59 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, 2020-21ல் 5,554 கோடியிலிருந்து 2021-22 நிதியாண்டில் 8,840 கோடியாக உயர்ந்துள்ளது. BHIM-UPI பரிவர்த்தனைகள் 2020-21 நிதியாண்டில் 2,233 கோடியிலிருந்து 2021-22 நிதியாண்டில் 4,597 கோடியாக உயர்ந்து, ஆண்டுக்கு ஆண்டு 106 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.