நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை அப்போது நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில் இன்று இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவில் குடியேறும் முஸ்லீம்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகை செய்கின்றது.
மேலும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை. பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சட்டத்திருத்தத்தினை அமல்படுத்துவதற்கான விதிகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம்
பொதுவாக, வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக ஒருநாட்டில் குடியேறியவர்கள் அந்நாட்டின் குடிமகன்களாக கருதப்படமாட்டார்கள். அப்படி குடியேறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். இதுதான் ஒருநாடு குடியுரிமை விவகாரத்தில் பின்பற்றிவரும். இதேதான் இந்தியாவிலும் கடந்த 1955ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. ஆனால் 1955-ஆம் ஆண்டில், 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கிற வெளிநாட்டவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து நாடாளுமன்றத்தில் பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும் கூட இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். அதாவது டிசம்பர் 31, 2014ஆம் ஆண்டுக்குள் குடியேறியவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்.
ஆனால் இதே நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அகதிகளுக்கு இந்த சட்டத்தின் கீழ் அனுமதியில்லை. அதே போல இலங்கை வாழ் தமிழர்களுக்கும் அனுமதியில்லை என்று கூறப்பட்டது. இது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. 100-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தினால் உயிரிழந்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் சொல்வது என்ன?
- 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவிற்கு வந்த பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அரசாங்கம் குடியுரிமை வழங்க முடியும்.
அதாவது, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், ஜைனர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகளுக்கு குடியுரிமை வழங்க சட்டம் முயல்கிறது.
அதேபோல் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடியேறிய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படமாட்டாது.
இந்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டில் குடியேறியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படமாட்டாது.
- அசாமின் கர்பி ஆங்லாங், மேகாலயாவின் கரோ மலைகள், மிசோரமில் உள்ள சக்மா மாவட்டம் மற்றும் திரிபுராவில் உள்ள பழங்குடியினர் பகுதிகள் உட்பட, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய பழங்குடியினப் பகுதிகளுக்கு சட்டம் விலக்கு அளிக்கிறது.