ஓடும் பேருந்தின் மீது மின் கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் 


 உத்தரப் பிரதேச மாநிலம் காஜிபூர் மாவட்டத்தில்  இன்று அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி  பேருந்து ஒன்றின் மீது மின் கம்பி உரசியதால் தீப்பிடித்து எரிந்தது.  அப்போது பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வந்துள்ளனர். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் பாதிப்புக்குள்ளானவர்களை மீட்கவும் தீயை கட்டுப்படுத்தவும் மீட்புக் குழுவினரும் தீயணைப்புத் துறையினரும் முயற்சி செய்தனர். ஆனாலும் மிகவும் மோசமான இந்த விபத்தினால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. 


இந்த விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். துரித நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். தீக்காயமடைந்த சிலர் மௌவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து எப்படி நடந்தது? 


திருமண ஊர்வலத்துடன் கிரிஜா காஹாவிலிருந்து மஹர்தாம் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. காஹாவில் இருந்து மஹர்தாம் செல்லும் தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்க,  முக்கியச் சாலையை விட பேருந்து ஓட்டுநர் ஷார்ட் கட் எனப்படும் குறுக்கு வழியில் பேருந்தினை இயக்கியுள்ளார். இந்நிலையில் பேருந்து மகாஹர் என்ற கிராமத்தை வந்தடைந்தவுடன், உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் பேருந்து நிலை தடுமாறியுள்ளது.  இதனால், பேருந்தில் பயணம் செய்தவர்கள் முதலில் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் உயர் மின்கம்பி உரசியதால்  பேருந்து கண் இமைக்கும் நேரத்தில் குபுகுபுவென தீப்பிடித்து எரிந்தது.  இதனால் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்க முயற்சி செய்தனர். ஆனால் தீயின் தீவிரம் அதிகமானதால் பயணிகள் பேருந்தில் இருந்து கீழ் இறங்க பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 


பேருந்து தீப்பற்றிய தகவல் கிடைத்து வெகுநேரத்திற்குப் பின்னர் பல காவல் நிலையங்களில் இருந்து காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.  துல்லாபூர், விர்னவ், காசிமாபாத் மற்றும் மத்ரா காவல் நிலையங்களில் இருந்து குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்தவுடன், கிராம மக்கள் கொதிப்படைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் கிராம மக்கள் கல் வீசி தாக்கியதில் பல போலீசார் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள், அருகில் ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால், மெயின்ரோடு வழியாக பஸ் செல்ல அனுமதிக்கப்படாததால், குறுக்கு வழியில் பஸ்சை இயக்க  வேண்டிய நிலை ஏற்பட்டது.  மெயின் ரோடு வழியாக பஸ் சென்றிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது என கூறியுள்ளனர். பேருந்து மீது உரசிய உயர் அழுத்த கம்பியில் 11 ஆயிரம் வோல்ட் மின்னோட்டம் இருந்ததாக கூறப்படுகின்றது.