தெலங்கானா மாநிலத்தில் உள்ள முனுகோடு சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால் ரெட்டி எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்து வந்தார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இன்று அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.


அதேபோல, பீகார் மாநிலத்தில் உள்ள மோகமா மற்றும் கோபல்கஞ்ச் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், மகாராஷ்ட்ராவில் உள்ள அந்தேரி கிழக்கு தொகுதிக்கும் ஹரியானா மாநிலத்தில் உள்ள அதம்பூர், உத்தரபிரதேசத்தில் கோலா கோகரண்ணாத் தொகுதியிலும், ஒடிசா மாநிலத்தின் தாம்நகரிலும் இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.


இந்த இடைத்தேர்தலில் துணை ராணுவப் படையினரும், அந்தந்த மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முனுகோடு தொகுதியில் 105 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமான வாக்குப்பதிவு மையங்களாக கருதப்படுகிறது.


இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸின் ராஜகோபால் ரெட்டி, பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டார்.


 






இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ராஜகோபால் ரெட்டிக்கும், டி.ஆர்.எஸ். கட்சியின் வேட்பாளர் ஸ்ரவந்தி ரெட்டிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.


மகாராஷ்டிரா இடைத்தேர்தலை பொறுத்தவரை, சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து முதல் முறையாக மக்கள் மன்றத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை எதிர்கொள்கிறது.


சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கேவின் மறைவை தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் இவர் இருமுறை வெற்றி பெற்றுள்ளார். 


அந்தேரி கிழக்கு சட்டப்பேரவை தொகுதி, மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள 26 தொகுதிகளில் ஒன்றாகும். இது மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. 


 






மறைந்த லட்கே 2014 இல் காங்கிரஸிலிருந்து இந்த தொகுதியை கைப்பற்றினார். 2009 இல், காங்கிரஸின் சுரேஷ் ஷெட்டி இந்த தொகுதியில் வெற்றிபெற்றார்.


நவம்பர் 6ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.