Byju’s: ஜூம் காலில் நடைபெற்ற தகாத நடவடிக்கைகளை தொடர்ந்து தான்,  பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரன் வெளியேற்றப்படதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஜூம் காலால் பைஜுஸில் வெடித்த பிரச்னை:


பல மணிநேரம் நீடித்த ஜூம் கால் அழைப்பிற்குப் பிறகு, கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜுஸின் தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்திரனை வெளியேற்ற, நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்கள் வாக்களித்துள்ளனர். முன்னதாக, பைஜூஸ் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, ஜூம் கால் வாயிலான அசாதாரண பொதுக் கூட்டத்தின் (EGM) நடவடிக்கைளை, நிறுவனத்தின் பல பணியாளர்கள் சீர்குலைக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், தாமதத்தை எதிர்கொண்டதாக, கூட்டத்தில் கலந்துகொண்ட இருவரை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.


ஜூம் காலில் ”ரவுடியிசம்” :


ப்ளூம்பெர்க் செய்தியின் படி, கூட்டத்தின் போது பல சந்தர்ப்பங்களில், அடையாளம் தெரியாத நபர்கள் விசில் அடித்துள்ளனர். அநாகரீகமாக பலர் அதிக சத்தத்தில் முழக்கங்களை எழுப்பி இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இதையடுத்து தான், பைஜுஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்திரனை வெளியேற்றுவது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அப்போது, தவறான நிர்வாகம் உள்ளிட்ட சிக்கல்களை காரணம் காட்டி, Prosus NV மற்றும் Peak XV பார்ட்னர்கள் உட்பட 60 சதவீதத்திற்கும் அதிகமான முதலீட்டாளர்கள், ரவீந்திரனை பதவியில் இருந்து நிக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.


பைஜுஸ் நிறுவனம் மறுப்பு:


ரவீந்திரன் மட்டுமின்றி, அவரது குடும்ப உறுப்பினர்களை நிறுவனத்தின் தலைமைப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாகவும் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. ஆனால்,  ரவீந்திரனை நிறுவனத்தின் குழுவில் இருந்து நீக்குவது உள்ளிட்ட முதலிட்டாளர்களின் தீர்மானங்களை பைஜூஸ் நிராகரித்துள்ளது. அந்த கூட்டத்தில் ரவீந்திரன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில், முதலீட்டாளர்களின்  தீர்மானங்கள் செல்லாது மற்றும் பலனளிக்காது என பைஜுஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 


பைஜுஸில் அடுத்து என்ன?


முக்கிய முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் CEO பதவியிலிருந்து பைஜு ரவீந்திரனை நீக்குவதற்கு வாக்களித்துள்ள நிலையில், அசாதாரண பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் முதலீட்டாளர்களின் முடிவை எதிர்த்து ரவீந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் முதலீட்டாளர்களின் கூட்டத்தை நடத்தலாம், ஆனால் அதில் எடுக்கப்படும் முடிவுகள் மார்ச் 13ம் தேதி வரை அமலுக்கு வரக் கூடாது என தெரிவித்தது. இதையடுத்து,  ரவீந்திரனை தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து நீக்கிய, முதலீட்டாளர்கள் முடிவு மார்ச் 13 வரை அமலுக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது.


கொரோனா ஊரடங்கு காலத்தின் போது, வீட்டில் இருந்தே படிக்கும் வகையிலான வசதிகளை வழங்கும் பைஜுஸ் நிறுவனம் பெரும் வளர்ச்சி கண்டது. ஆனால், கட்டுப்பாடுகள் தளர்ந்ததுமே தொடர்ந்து அந்நிறுவனம் சரிவை சந்தித்து வருகிறது. இதனால், நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தான், பைஜுஸ் நிறுவனரான ரவீந்திரனையே அந்நிறுவனத்தில் இருந்து வெளியேற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.