Gujarat Accident: குஜராத் மாநிலம் நாடியாட் பகுதியில் 25 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். அகமதாபாத்-வதோதரா விரைவுச் சாலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கதியா, “விபத்துக்குள்ளான பேருந்து அகமதாபாத்தில் இருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்தது, அதில் சுமார் 23 பயணிகள் இருந்தனர். நாடியாட் பகுதியில் உள்ள அகமதாபாத்-வதோதரா விரைவுச் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த சிமெண்ட் லாரி ஒன்று திடீரென இடதுபுறமாக திரும்பி பேருந்தின் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் பக்கவாட்டில் இருந்த 25 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். டேங்கர் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
நள்ளிரவு நேரத்தில் விபத்து நேர்ந்ததால் உடனடியாக மிட்பு பணிகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள்ளே, லேசான காயங்களுடன் தப்பிய பயணிகள் தங்களது உடைமைகளுடன் சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். அதோடு, மாற்று பேருந்து வசதி எதுவும் கிடைக்காததால், பெண்கள் உள்ளிட்ட பலரும் நீண்ட நேரம் சாலையோரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.