ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கொடூரமாகக் கொன்றது தொடர்பான வழக்கில், 7 பேரை மாவட்ட போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். கூலிப்படை கும்பலை வைத்து தொழிலதிபரை கொன்றது தெரியவந்துள்ளது. நிதி தகராறு பிரச்னைகள் இருந்ததாலும், அதுதவிர குற்றவாளிகளின் மனைவிகளுடன் தொழிலதிபரின் தகாத உறவே கொலைக்கான காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்.


நாடெங்கும் கொரோனா பல மோசமான செய்திகளை தந்துகொண்டிருந்தாலும், மனிதர்களின் வஞ்சம், வன்மம், பகைக்கு ஓர் முடிவில்லை. சங்கா ரெட்டி மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு நீர்நிலைகளில் இருந்து இறந்தவரின் தலை மற்றும் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசாரின் கூற்றுப்படி, கொலைசெய்யப்பட்டவர் பெயர் கே.ராஜு எனவும், அவருக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனைவிகளுடன் தகாத உறவு இருந்ததாகவும், இது போக இவர்களுக்கு இடையே பணப் பிரச்சனை இருந்ததாகவும், அதுவே கொலைக்கான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


35 வயதான கே ராஜு செவ்வாய்க்கிழமை காணாமல் போனதாக பிடிஎல் பானூர் காவல்துறை தெரிவித்துள்ளது. ராஜுவை காணாததால் அவரது சகோதரர் கே.கோபால் புதன்கிழமை போலீசில் புகார் செய்தார். பாதிக்கப்பட்டவரின் தொலைபேசி பதிவுகளை சரிபார்த்ததன் மூலம், அவர் கடைசியாக பேசிய நபர்களை போலீசார் கண்டுபிடித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், ராஜூ கொல்லப்பட்டது தெரியவந்தது.



போலீசாரின் கூற்றுப்படி, தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கும் தொடர்பு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்லபு ரமேஷ், என் விஷ்ணு, மது, கடவத் ராம் சிங், கடவத் வெங்கடேஷ், கடவத் மல்லேஷ், வாடித்யா பாலு நாயக், கடவத் ஜெயபால் மற்றும் சங்கர் என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. "கொலைசெய்யப்பட்டவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து நன்கு பணம் சம்பாதித்து வருகிறார். கிராமத்தில் மற்றவர்களிடம் ஆதிக்கம் செலுத்தி, குற்றம் சாட்டப்பட்ட சிலரின் மனைவிகள் உட்பட பல பெண்களுடன் தகாத உறவை வளர்த்து வருகிறார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உறவினர்கள் சேர்ந்து, ரமேஷ், விஷ்ணு, மது ஆகியோடரிடம் ராஜுவை கொலை செய்யக்கோரி பணம் தந்துள்ளனர்" என்று அறிக்கையில் காவல்துறை மேற்கோளிட்டுள்ளது.



ஒரு மருந்து நிறுவனத்திடமிருந்து வரும் பணத்தை எவ்வாறு பங்கிட்டுக் கொள்ளவேண்டும் என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிலம் வாங்குபவரைப் போல ஆள்மாறாட்டம் செய்து மது ,ராஜுவுக்கு பொறிவைத்ததாகக் கூறப்படுகிறது. கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகளும் கடவத் ராம் சிங்கும் ராஜுவை ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரத்திற்கான சந்திப்பதுபோல் சந்தித்து, பின்னர் ஒன்றாக மது அருந்தி, ராஜுவை கத்தி மற்றும் கோடரியால் கடுமையாக தாக்கியுள்ளனர்.