இமாச்சல பிரதேசத்தில்  தொடர் மழை பெய்து வரும் நிலையில் குலு மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இமாச்சல பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கட்டடங்கள் ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். 


மேலும் இயற்கை சீற்றத்தால் 200 க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே வெள்ள பாதிப்புகள் குறித்து இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்வீந்தர் சிங்கிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சில தினங்களுக்கு முன் பேசினார். மேலும் அங்கு நடைபெறும் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதேசமயம் மீட்பு பணிகளை அரசு முடுக்கி விட்டுள்ளது. 






 இமாச்சல பிரதேசம் வரலாற்றில் இதுபோன்ற கடுமையான சேதத்தை சந்தித்ததில்லை என்றும், மாநிலத்தில் ரூ. 13,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவேரூ.10,000 கோடி நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். மழையால் ஏற்பட்ட பேரழிவை “தேசியப் பேரிடராக” அறிவிக்க வேண்டும் என்றும்  அம்மாநில காங்கிரஸ் தலைவரான ராஜீவ் சுக்லா வலியுறுத்யுள்ளார். 


இந்நிலையில், அங்குள்ள குலு மாவட்டத்தில் அன்னி நகரில் கட்டிடங்கள் இடிந்து விழும் வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்னி நகரில் பேருந்து நிலையம் அருகே குறைந்தது எட்டு முதல் ஒன்பது பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள முதலமைச்சர் சுசுக்விந்தர் சிங் சுகு, “அன்னி, குலுவில் இருந்து  பேரழிவு தரும் நிலச்சரிவின் காட்சிகள் வெளிவருகின்றன. மாவட்ட நிர்வாகம்  ஆபத்தை முன்கூட்டியே கண்டறிந்து கட்டிடத்தை சுற்றி இரண்டு நாட்களுக்கு முன்னர் மக்கள் அனைவரையும் வெளியேற்றியது’ என கூறியுள்ளார்.