சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா விரைவில் தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


உலகில் மிகப்பெரும் சர்க்கரை உற்பத்தி மற்றும் நுகர்வோர் நாடாக உள்ளது இந்தியா. இந்நிலையில், அக்டோபரில் இருந்து கரும்பு உற்பத்தி சீசன் தொடங்க இருக்கிறது. ஆனால், மழை பொழிவு குறைந்ததால் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஏழாண்டுகளாக இல்லாமல் தடை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அரசு விரைவில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


உலக அளவில் சர்க்கரை ஏற்ற்மதி செய்வதில் மிகப்பெரிய நாடாக உள்ள இந்தியா தடை அறிவிப்பை வெளியிட்டால் சர்வதேச உணவு சந்தையில் சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிர்புணர்கள் கணித்துள்ளனர். உலகளவில் உணவு சந்தையில் சர்க்கரையின் விலை கடுமையாக உயரும் என்பது குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கு உலக நாடுகளுக்கு 6.1 மில்லியன் டன் அளவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது. அதுவும் வரும் செப்டம்பர் 30 வரை மட்டுமே. கடந்த சீசனில் 11.1 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


கரும்பு அதிகம் விளையும் மாவட்டங்கள் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலத்தில் பருவமழை குறைந்துவிட்டதுதான் காரணமாக ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும். இந்த மாவட்டங்களில் இதுவரை வழக்கத்தை விட இந்தாண்டு 50% குறைவாகவே மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவித்துள்ளன. நாட்டின் சர்க்கரை தேவையை பூர்த்தி செய்வதில் இந்த மாவட்டங்களின் கரும்பு உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கே பருவமழையின் அளவு குறைந்ததால் உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்கே உற்பத்தி சரியாக இருக்குமா என்று தெரியாத சூழல் எழுந்துள்ளது. பண்டிகை கால வர உள்ள நிலையில் உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதே முதன்மையான நோக்கமாக இருக்கும். அப்படி, இந்தியா சர்க்கரை ஏற்றுமதிக்கும் தடை விதித்தால் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சர்க்கரை விலை கடுமையாக உயரும் என்று சொல்லப்படுகிறது. 


கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வாரம் சர்க்கரை விலை சற்று உயர்ந்திருக்கிறது. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் 2 லட்சம் டன் அதிகமாக விற்பனை செய்ய சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 2023-2024-ஆம் ஆண்டு இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 3.3% ஆக குறையும் அதாவது 31.7 மில்லியன் டன் அளவில் மட்டும் உற்பத்தி செய்யப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


எதிர்பார்த்த அளவில் மழை இல்லாததால் இந்த பருவத்தில் விளைச்சல் குறைவாக இருக்கும் என்ற நிலையில் சர்க்கரை ஏற்றுமதி தடை செய்யப்படும். வெள்ளை அரிசி ஏற்றுமதி செய்வதை அரசு ஏற்கனவே தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.