பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு முதன்முறையாக நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்:
அப்போது, அவர் கூறியதாவது,” மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக நடக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு நடைபோடும். மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம்.
நாட்டு மக்களுக்கு நான் உத்தரவாதம் அளித்து வருகிறேன். அதை களத்தில் கொண்டு வருவதே எங்கள் நோக்கம். எங்களின் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கான திசையை இந்த பட்ஜெட் தீர்மானிக்கும். இந்த பட்ஜெட் நமது பாரதத்திற்கான வலுவான அடித்தளமாக அமையும்.
மக்களுக்காக அர்ப்பணிப்பு:
ஜனவரி மாதம் முதல் இதுவரை எவ்வளவோ போராடினோம். ஆனால், தற்போது அந்த காலம் முடிந்து பொதுமக்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்று நாட்டின் அனைத்து எம்.பி.க்களையும் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து கட்சிகளும் கட்சி எல்லைகளுக்கு அப்பால் எழுந்து நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்து, அடுத்த 4.5 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தின் இந்த கண்ணியமான மேடையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். 2029 தேர்தலின்போது நீங்கள் எந்த விளையாட்டையும் விளையாடலாம். ஆனால், அதுவரை விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் அதிகாரம் பெற நாங்கள் வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்கள் என்று எதிர்பார்த்த பா.ஜ.க. நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் உதவியுடன் ஆட்சியை 3வது முறையாக பிடித்தது. கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சியைப் பிடித்துள்ள மோடி அரசு தங்களது 3வது ஆட்சியில் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வட இந்தியாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, பருவகால இழப்புகள், வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? என்று இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் சமீபகாலமாக தங்கம் விலை தாறுமாறாக உயர்நது வருகிறது. இதனால், சாமானியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா? என்றும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு 2 இடத்திலா? நாடு முழுவதும் பரவியுள்ளதா? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
மேலும் படிக்க: RSS: அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் - 1966ல் விதித்த தடையை நீக்கிய மத்திய அரசு