RSS: ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில்அரசு ஊழியர்கள் பங்கேற்க கூடாது என, 1966ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.


ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள்:


ராஷ்டிரிய ஸ்வயம் ஷேவக் எனப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க விதிக்கப்பட்டு இருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதுதொடர்பாக,  1966ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை, பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை தற்போது ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் அமித் மாளவியாவும், அரசு உத்தரவின் நகலை இணையத்தில் பகிர்ந்து, ”58 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட "அரசியலமைப்புக்கு எதிரான" உத்தரவு மோடி அரசால் வாபஸ் பெறப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.






மோடியை அட்டாக் செய்யும் காங்கிரஸ்


காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”காந்திஜி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1948 பிப்ரவரியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சர்தார் படேல் தடை செய்தார். இதையடுத்து, நல்ல நடத்தை உறுதியளித்ததன் பேரில் தடை வாபஸ் பெறப்பட்டது. இதற்குப் பிறகும் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் கொடி பறக்கவில்லை. 1966 ஆம் ஆண்டில், ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அது சரியான முடிவு. ஜூன் 4, 2024க்குப் பிறகு, சுய-அபிஷேகம் செய்யப்பட்ட உயிரியல் பிறப்பற்ற பிரதமருக்கும், ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையிலான உறவுகள் முறிந்துள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட நடைமுறையில் இருந்த 58 ஆண்டுகால தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது. அதிகாரத்துவம் இப்போது நிக்கர்களிலும் வரலாம் என்று நான் நினைக்கிறேன்" என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். (நிக்கர் என ஆர்எஸ்எஸ் சீருடையைக் குறிப்பிடுகிறார்)