உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவியுமான மாயாவதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
முன்னதாக, உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய சட்டபேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் ஏழு கட்டங்களாக பிப்ரவரி மாதம் 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில், மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி எந்தவொரு குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தையும் செலுத்தாது என்ற கருத்தக் கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடவில்லை என்ற நிலைப்பாடு அவரின் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
மாயாவதியும் அரசியல் சொல்லாடலும்:
பட்டியலின, பழங்குடியின, இதர பிரபடுத்தப்பட்டோர், இஸ்லாமியர்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் என அனைவரது அரசியலையும் பிரதிநிதிப்படுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அம்பேத்கர்,காந்தி, நேருவை விட ஒடுக்கப்பட்ட மக்களின் வரையரையை மறுவாசிப்புக்கு உட்படுத்தியதில் கான்ஷி ராம், மாயாவதியின் பங்கு மிக அதிகம்.
இருப்பினும், நாட்டின் அநேக அரசியல் அறிவு ஜீவிகளும், பெண்ணியல் ஆர்வலர்களும் மாயாவதியின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்து வருகின்றனர். இந்திய அரசியல்வாதிகளில் அதிகம் புறக்கணிக்கப்பட்டவர் மாயாவதியாக உள்ளார்.
மாயாவதி போன்ற அரசியல் தலைவர்களை வெறும் மேம்போக்கான சில அம்சங்களை கொண்டு இந்த பொதுச்சமூகம் அளவிட்டு வருகிறது. மாயாவது ஒரு பெண், அதுவும் தலித் பெண். இந்திரா காந்தி, மம்தா பேனர்ஜி, மறைந்த ஜெயலலிதா போன்ற பெண் அரசியல் தலைவர்களை விட பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனையை வலியுறுத்தி வருபவர் மாயாவதி.
மற்ற பெண் அரசியல் தலைவர்களை விட, கடந்த கால வரலாற்று உண்மைகளை/விதிகளை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு மாயாவதிக்கு இருந்தது.
2024 நடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் பிரதமர் வேட்பாளாராக மம்தா பேனர்ஜி முன்னிலைப்படுத்தப்படுகிறார். உத்திர பிரதேசத்தில், அடக்குமுறைக்கு எதிரான பெண் சமூகப் போராளியாக பிரியங்கா காந்தி காட்சிப்படுத்தப்பட்டு வருகிறார். ஆனால், தலித் அரசியல் தலைவர்களை அனைவருக்கும் பொதுவானவர்கள் என்று மறுக்கும் போக்கும் நம்மில் ஏற்றப்பட்டுவிட்டது.
மாயாவதியிடம் உள்ள அரசியல் நிலைப்பாடு, ஒடுக்கமுறைகள் பற்றிய நீதியான வினாக்கள் மம்தா பேனர்ஜியிடம் உண்டா? என்றால் நம்மிடம் பதில் இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் மக்கள் மன்றத்தில் அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார் என்று கட்டுரையின் முடிவில்தான் மாயவதியின் ஆட்சியில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடியது என்ற வாசகமும் எழுதப்பட்டுவருகிறது.
ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இந்த நாட்டின் பெரும்பான்மையினர் என்று உரத்தக்குரலில் கத்திய ஒரு தலைவர், 'பகுஜன்' அடையாளம் என்ற கனவு தேசத்தை உருவாக்க நினைத்த ஒரு தலைவர் இன்று ஜனநாயக அரசியலில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்திருக்கிறார். இது, இந்திய அரசியலில் மிகப்பெரிய பின்னடைவாகும். மாயாவதியின் அரசியல் வருகை என்பது யதேச்சையானதாக இருக்கலாம். ஒரு காலத்தில் எப்படி இருந்தார்? இப்போது மாயமாகி விட்டார் என்ற அனுதாபங்களை நாம் அள்ளித்தெளிக்கலாம்.
ஆனால், அரசியல் வாழ்க்கை வாழ்வதே ஒரு துயர அனுபவம் என்று புரிதலில்தான் தலித் அரசியல் தொடங்குகிறது. அவரின் பின்னடைவு என்பது இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை முரண்பாடு. இந்த நூற்றாண்டில், மாயாவதிக்கு இணையான மற்றொரு தலித் பெண் அரசியல் தலைவரை இந்திய ஜனநாயகம் உருவாக்கிட முடியுமா? என்ற ஆழமான நெருக்கடையை இந்த முரண்பாடுகள் குறிக்கின்றன.