ஒடிசா மாநிலத்தில் 11 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 10 கிலோ போதை பொருளை (Brown sugar) பறிமுதல் செய்த போலீசார், பாலசோர் மாவட்டத்தில் போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டில் 6 பேரை கைது செய்துள்ளனர்.
நேற்று போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் சஹாதேவ்குண்டா காவல் நிலையத்திற்குட்பட்ட ஃபுலாடி அருகே ஒரு இடத்தில் சோதனை நடத்தப்பட்டதாக கிழக்கு ரேஞ்ச் ஐஜிபி ஹிமான்சு குமார் லால் மற்றும் எஸ்பி பாலசோர் சுதான்சு சேகர் சதாங்கி ஆகியோர் தெரிவித்தனர்.
போதை பொருள் கடத்தல் சம்பவம் குறித்து விரிவாக பேசியுள்ள எஸ்பி சுதான்சு சேகர் சதாங்கி, "11 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோவுக்கும் அதிகமான பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது. ஆறு பாலித்தீன் பாக்கெட்டுகளில் போதைப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக 6 பேர், உள்ளூரை சேர்ந்த 5 பேர் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்கம் - அஸாம் எல்லையில் இருந்து போதைப்பொருள் வாங்கப்பட்டு, ஒடிசாவின் பல்வேறு பகுதிகளுக்கு வழங்கப்பட இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தவிர, மோட்டார் சைக்கிள், ஒரு ஸ்கூட்டர், 5 மொபைல் போன்கள் மற்றும் ₹ 21,000 ரொக்கம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்" என்றார்.
போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில்கூட, மும்பை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 16 கிலோகிராம் ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் பறிமுதல் செய்திருந்தனர். மேலும், இது தொடர்பாக கானாவைச் சேர்ந்த பயணி மற்றும் ஒரு பெண் ஒருவரை கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து கானா நாட்டுப் பெண் கைது செய்யப்பட்டதாக அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்க நாடான மலாவியில் இருந்து கத்தார் வழியாக மும்பைக்கு பயணித்த பயணி ஒருவர் போதைப்பொருள் கடத்த முயல்வதாக கிடைத்த தகவலின் பேரில் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் மும்பை பிரிவு சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
திட்டத்தின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் குழு விமான நிலையத்தில் நிலைநிறுத்தப்பட்டனர். சந்தேகத்திற்குரிய பயணி ஒருவரை இடைமறித்து சோதனை செய்தனர். அதிகாரிகள் அவரது பொருள்களை சோதனை செய்ததில், டிராலி பைகளில் துவாரங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஹெராயினின் மதிப்பு சர்வதேச சந்தையில் 100 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.