திருமணத்தின் போது மணமகனின் விக் கழன்று விழுந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணமகனுக்கு மயக்கம்...
உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் உள்ள பரியார் கிராமத்தில் லகான் காஷ்யப் என்பவரின் மகள் நிஷாவிற்கும், கான்பூர் நகரைச் சேர்ந்த அஷோக் குமார் காஷ்யப்பின் மகன் பங்கஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண நாளான மே 20ம் தேதி அன்று அருகில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் திருமண விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை மாற்றும் நிகழ்விற்காக மணமகன் பங்கஜும், மணமகள் நிஷாவும் மேடைக்கு வந்துள்ளனர். அந்த சமயத்தில் மணமகன் பங்கஜுக்கு தலைச்சுற்றல் ஏற்படவே மயங்கி விழுந்துள்ளார். அப்போது மணமகளின் சகோதரர்கள் நிதின் மற்றும் விபின் ஆகியோர் தண்ணீரை முகத்திலும், தலையிலும் தெளித்து தலையை தேய்த்துவிட்டுள்ளனர். அப்போது மணமகன் அணிந்திருந்த விக் கையோடு கழன்று வந்துள்ளது. இதைப்பார்த்த மணப்பெண்ணின் சகோதரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதைப்பார்த்த திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். இதனால் கடுப்பான மணமகள் திருமணத்தை உடனடியாக நிறுத்தியுள்ளார்.
நின்றுபோன கல்யாணம்..
மணமகன் வீட்டார் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் சம்மதிக்காததால் திருமணம் நிறுத்தப்பட்டது. மணமகனை சிறை பிடித்த பெண்வீட்டார் மணப்பெண்ணை ஏமாற்றிவிட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருமணத்திற்கு ஆன செலவினை தரவேண்டும் என்று பெண்ணின் தரப்பினர் வலியுறுத்த இந்த பேச்சுவார்த்தை விடிய விடிய நடைபெற்றிருக்கிறது. பின்னர் பரியார் கிராமத்தின் தலைவர் ராம்ஜித் யாதவ் சம்பவ இடத்திற்குச் சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்போது இந்த திருமணத்திற்காக 5.66 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் அதை மணமகன் வீட்டாரிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட பெண் வீட்டினர் வலிப்பு நோய் காரணமாக மாப்பிள்ளையின் தலையில் முடி இல்லை என்பதை மறைத்து திருமணம் நடைபெறுவதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மணமகனுக்கு வலிப்பு நோய் இருப்பதும் அவர் தலையில் முடி இல்லாததால் விக் அணிந்திருக்கிறார் என்பதும் இந்த திருமணத்தை ஏற்பாடு செய்த இடைத்தரகருக்கேத் தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.
இந்தி படம்..
அமர் கவுஷிக் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் பாலா என்ற திரைப்படம் வெளியானது. பெங்காளி திரைப்பட இயக்குநர் பாவெல் பட்டாசர்ஜியின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. முடி கொட்டும் பிரச்சனையால் இளம் வயதிலேயே வழுக்கை தலை விழுந்ததால் தன்னம்பிக்கையை இழந்து, சமூக அழுத்தத்திற்கு நாயகன் உள்ளாவதை எடுத்துக்காட்டியிருக்கும் இந்த திரைப்படம். 25 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சுமார் 170 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவித்தது. இந்த திரைப்படத்தைப் போலவே வழுக்கை தலை காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.