Breaking News LIVE Tamil : நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டிற்கே நான் முதலமைச்சராக இருந்தாலும் கொளத்தூருக்கு எம்எல்ஏதான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஏறுவதற்கு முன்பாகவே விமானம் புறப்பட்ட விவகாரத்தில் ஏர் ஏசியா நிறுவன மேலாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள விருதுநகர் அய்யனார் ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 6 பேருக்கு வாந்தி, மயக்கம் புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டலில் ஆய்வு செய்ததில், குழம்புகளில் காகிதங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
கொளத்தூர் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சியில், தனது ஒரு வயது பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு தீ குண்டத்தில் இறங்கிய தந்தை, கால் இடறி நெருப்பில் விழுந்தார். 36 % தீக்காயங்களுடன் குழந்தை தர்னிஜாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
தமிழ்நாட்டில் ஏற்கனவே 300 கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் கூடுதலாக 200 கடைகளில் விற்கப்படும் என்றும், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் எட்டாவது நாளாக மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
2022-2023 நிதி ஆண்டுக்கான தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல்செய்ய இன்று கடைசிநாள். இதுவரை 6.13 கோடி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை: ஆக.2ல் கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் கலவரத்தையும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதையும் தனித்தனி விசயமாக பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கும் நீதியை பெற்றுத்தருவோம்.
எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்த் 154 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உரிய நேரத்தில் தரையிறக்கப்பட்டதால் 154 பயணிகளும் உயிர் தப்பினர்.
மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கை விசாரிப்பது கடினம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பெண்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை திரும்பப் பெற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த அவர் “குறிப்பிட்ட சமூகத்தின் மீது குற்றம்சாட்டி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதை விசாரிப்பது கடினம். வன்முறை, போதைப்பொருள் கடத்தல், வனப்பகுதி அழித்தல் என அனைத்தும் ஒரே மனுவில் குறிப்பிடப்பட்டு இருப்பதை ஏற்க முடியாது. குறிப்பிட்ட கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்தால் வழக்கை விசாரிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் எதிர்க்கட்சியினர் இதே கோரிக்கையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இன்று 8வது நாளாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வீரவநல்லூர் செடி புட்டா சேலை, ஜிடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, கடற்கரை To செங்கல்பட்டு மார்க்கமாக சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே செல்சியா என்ற 22 வயது இளம்பெண் உயிரிழப்பு.
யாழினி என்ற மற்றொரு இளம்பெண் காயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக தகவல்.
நாமக்கல்லில் இன்றை முட்டை விலை ரூ.4.20ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முட்டை விலை ரூ.4.80ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டு இருக்கையில் ஆர்பிஎஃப் காவலர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரயிலில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். அதில் ஒரு ஆர்பிஎஃப் காவலர் மற்றும் மூன்று பயணிகள் உயிரிழந்துள்ளனர். 4 பேரை சுட்டுவிட்டு தஹிசார் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சி செய்த ஆர்பிஎஃப் காவலர் துப்பாக்கியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சதுரகிரி மலைக்கு செல்ல இன்று முதல் மூன்று நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாகி உள்ளன. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் தண்டவாள பராமரிப்பு காரணமாக ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Background
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூலை 31) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 436வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -